மீனவர்களுக்கு ஆண்டுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிதியுதவி: ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டுள்ளது.;
அமராவதி,
ஆந்திர பிரதேச மாநிலத்தில் 25 மக்களவை தொகுதி, 175 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் வரும் மே 13ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில் பல்வேறு கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை அம்மாநில முதல்-மந்திரியும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி இன்று வெளியிட்டார். கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நவரத்னாலு என்ற பெயரில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. தற்போது அதில் சிறிய மாற்றங்களை செய்து நவரத்னாலு பிளஸ் என்று வெளியிட்டுள்ளது.
ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:-
* விசாகப்பட்டினத்தை நிர்வாக தலைநகராக மாற்றப்படும். மாநிலத்தின் வளர்ச்சி இயந்திரமாக இது உருவாக்கப்படும்.
* அமராவதியை சட்டமன்ற தலைநகராகவும், கர்னூலை நீதித்துறை தலைநகராக உருவாக்கப்படும்.
* நல ஓய்வூதியத்தை ரூ.3,000லிருந்து ரூ.3,500 ஆக உயர்த்தவும். இது 2028 ஜனவரியில் ரூ.250 ஆகவும், 2029 ஜனவரியில் மேலும் ரூ.250 ஆகவும் உயர்த்தப்பட்டு மொத்த ஓய்வூதிய தொகை ரூ.3,500 ஆக உயர்த்தப்படும்.
* விவசாயிகளுக்கு வழங்கப்படும் வருடாந்திர நிதியுதவியை ரூ.13,500லிருந்து ரூ.16,000 ஆக உயர்ந்தப்படும்.
* பெண்களுக்கான அம்மாவோடிக்கு ஆண்டுக்கு ரூ.15,000 நிதி ஒதுக்கீட்டை ரூ.17,000 ஆக உயர்த்தப்படும். இத்திட்டத்தின் கீழ், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் தாய்மார்களுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.
* வட்டியில்லா பயிர்கடனை தற்போதுள்ள ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்படும்.
* மத்ஸ்யகார பரோசா திட்டத்தின் கீழ் மீனவர்களுக்கு ஆண்டுக்கு தலா ரூ.10,000 நிதியுதவி வழங்கப்படும்.