மாநில உரிமைகளை மீட்டெடுக்க பா.ம.க.-பா.ஜனதா கூட்டணிக்கு வாக்களிப்பீர் - டாக்டர் ராமதாஸ்

மக்களை மதிக்காத தி.மு.க.வுக்கு மக்கள் அளிக்க வேண்டிய சரியான தண்டனை தோல்விதான் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Update: 2024-04-17 06:01 GMT

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவை அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ஆளப் போகிறவர்கள் யார் என்பதை தீர்மானிப்பதற்கான 18-ம் மக்களவைத் தேர்தல்களின் முதல்கட்ட வாக்குப்பதிவு தமிழ்நாடு மற்றும் புதுவையில் நாளை மறுநாள் (ஏப்ரல் 19) நடைபெற இருக்கிறது. தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலையுடன் நிறைவடையும் நிலையில், யாருக்கு வாக்களிப்பது என்பதை நீங்கள் சிந்தித்து செயல்படுத்துவதற்கான 48 மணி நேர கெடு இன்று மாலை 6.00 மணிக்கு தொடங்குகிறது. இந்தக் காலத்தில் நீங்கள் நல்ல முடிவை எடுக்க வேண்டும்.

2024 மக்களவைத் தேர்தலை பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து பாட்டாளி மக்கள் கட்சி எதிர்கொள்கிறது. தமிழ் மாநில காங்கிரஸ், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு, புதிய நீதிக் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ளன. மத்தியில் நரேந்திர மோடி அவர்களை மூன்றாவது முறையாக பிரதமராக்க வேண்டும் என்று இக்கட்சிகள் உறுதி பூண்டுள்ளன.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசுதான் மத்தியில் மீண்டும் அமைய வேண்டும் என்பதே தமிழ்நாட்டு மக்களின் விருப்பம் ஆகும். இந்தியா முழுவதும் வீசும் அதே மோடி ஆதரவு அலைதான் தமிழ்நாட்டிலும் வீசுகிறது. தமிழகத்தின் பெரும்பான்மையான பகுதிகளுக்கு பரப்புரை சென்று வந்ததன் மூலம் மோடி ஆதரவு அலையை என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது.

பாட்டாளி மக்கள் கட்சியைப் பொறுத்தவரை சமூகநீதியை வளர்த்தெடுப்பதையும், தமிழக உரிமைகளை வென்றெடுப்பதையும் மிக முக்கியமானதாக கருதுகிறது. இந்த முறை பா.ம.க. அதிக பிரதிநிதித்துவம் பெற்றால் சாதிவாரி கணக்கெடுப்பு கண்டிப்பாக சாத்தியமாகும். அதைத் தொடர்ந்து இட ஒதுக்கீட்டின் அளவை அதிகரிக்க வேண்டும் என்ற பெருங்கனவும் நனவு ஆகும். சமூகநீதிக்காகவும், தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும் குரல் கொடுப்பதையே முதல் கடமையாகக் கொண்டிருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி, அதிகபட்சமாக அது போட்டியிடும் 10 இடங்களிலும் வெற்றி பெற்றால் தான் தமிழகத்தின் குரல் நாடாளுமன்றத்தில் வலிமையாக ஒலிக்கும்; உரிமைகள் கிடைக்கும்.

மூன்றாண்டு கால தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் விளையவில்லை. மாறாக, மின்கட்டணம் உயர்வு, சொத்துவரி உயர்வு, குடிநீர் வரி உயர்வு, பத்திரப்பதிவு கட்டணம் உயர்வு, மோட்டார் வாகன வரி உயர்வு, அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, 10 முறை பால் விலை உயர்வு ஆகியவை தான் வாக்களித்த மக்களுக்கு திமுக அரசு அளித்த பரிசு ஆகும். தி.மு.க. அரசின் சாதனை என்று சொல்லிக் கொள்வதற்கு ஒன்று கூட இல்லை.

2021 தேர்தலில் வெற்றி பெற்றால் கண்டிப்பாக செய்து முடிப்போம் என்று 510 வாக்குறுதிகளை தி.மு.க. அளித்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து மூன்றாண்டுகள் ஆகியும் 50 வாக்குறுதிகள் கூட இன்னும் நிறைவேற்றப்படவில்லை. மக்களை மதிக்காத தி.மு.க.வுக்கு மக்கள் அளிக்க வேண்டிய சரியான தண்டனை தோல்விதான். அதை தி.மு.க.வுக்கு நீங்கள் அளிக்க வேண்டும்.

தமிழக வாக்காளர்களுக்கு ஒரே தேர்தலில் இரு இலக்குகளை சாதிக்கும் வாய்ப்புகள் கிடைத்துள்ளன. மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான நல்லாட்சியை மீண்டும் ஏற்படுத்துவது, தமிழ்நாட்டில் மக்களை வாட்டும் தி.மு.க. அரசை தண்டிப்பது ஆகியவைதான் அந்த இரு இலக்குகள். இந்த இலக்குகளை சாதிக்க நாளை மறுநாள் நடைபெறவுள்ள தேர்தலில் பா.ம.க., பாஜக மற்றும் அவற்றின் கூட்டணிக் கட்சிகளுக்கு மாம்பழம், தாமரை, சைக்கிள், குக்கர், பலாப்பழம் ஆகிய சின்னங்களில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்; அதன்மூலம் தமிழ்நாட்டை தீமைகளில் இருந்து மீட்டெடுக்கவும், தமிழ்நாட்டின் உரிமைகளை வென்றெடுக்கவும் வகை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்