நாடே எதிர்பார்க்கும் வயநாட்டில் வாகை சூடப்போவது யார்?

வயநாட்டில் ராகுல்காந்தி 2வது முறையாக போட்டியிடுகிறார்.

Update: 2024-04-09 01:52 GMT

திருவனந்தபுரம்,

கடவுளின் தேசம் என அழைக்கப்படும் கேரளாவின் வட எல்லையில் வயநாடு மாவட்டம் அமைந்து உள்ளது. இது இயற்கை எழில் மிகுந்த இடமாக திகழ்கிறது. வயநாடு தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்கள் இணையும் இடமாக உள்ளது. 2009-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின் போது, வயநாடு நாடாளுமன்ற தொகுதி உருவானது.

வயநாடு நாடாளுமன்ற தொகுதியில் மானந்தவாடி (தனி), சுல்தான்பத்தேரி (தனி), கல்பெட்டா, கோழிக்கோடு மாவட்டத்தில் திருவம்பாடி, வயநாடு மாவட்டத்தில் ஈரநாடு, நீலம்பூர், வாண்டூர் (தனி) ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. 2009, 2014-ம் ஆண்டுகளில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஷானவாஸ் வெற்றி பெற்றார்.

ராகுல்காந்தி வெற்றி

கடந்த 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி முதல் முறையாக வயநாடு தொகுதி மற்றும் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதியிலும் போட்டியிட்டார். இதன் முடிவில் அமேதியில் மத்திய மந்திரி ஸ்மிருதி இரானியிடம் தோல்வி அடைந்தார். ஆனால், வயநாட்டில் 4 லட்சத்து 31 ஆயிரத்து 770 வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல்காந்தி வெற்றி பெற்றார்.

அப்போது ராகுல்காந்தியை எதிர்த்து பா.ஜ.க. கூட்டணி கட்சியான பாரதிய தர்ம ஜன கட்சி (பி.டி.ஜே.எஸ்.) தலைவர் துஷார் வெள்ளப்பள்ளி போட்டியிட்டார். அவர் 78 ஆயிரத்து 816 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.

வயநாட்டில் மீண்டும் களமிறங்கும் ராகுல்காந்தி

தற்போது வயநாடு தொகுதியில் 2-வது முறையாக ராகுல்காந்தி போட்டியிடுகிறார். கேரளாவில் உள்ள 20 நாடாளுமன்ற தொகுதிகளில், இந்த தொகுதியை முக்கிய தொகுதியாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். கடந்த முறை ராகுல்காந்தி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதற்கு காரணம் எதிர்த்து நின்ற வேட்பாளர்கள் தொகுதிக்கு அறிமுகம் இல்லாதவர்கள் ஆகும். இதனால் கடுமையான போட்டி நிலவவில்லை.

காங்கிரஸ் கோட்டை

கடந்த தேர்தலில் ராகுல்காந்தி கூட தோல்வியை சந்திப்பார் என கருத்து நிலவியது. பின்னர் காங்கிரஸ் வெற்றி பெற்றதால், கட்சி தலைமைக்கு நம்பிக்கை ஏற்பட்டது. இதனால் தற்போது 2-வது முறையாக ராகுல்காந்தியை களம் இறக்கி உள்ளது. இந்த தொகுதியில் இந்துக்கள் 45 சதவீதம், முஸ்லிம்கள் 41.1 சதவீதம், கிறிஸ்தவர்கள் 13.7 சதவீதம் உள்ளனர்.

காங்கிரஸ் தொடர்ந்து 3 முறை வெற்றி பெற்று வயநாடு தனது கோட்டை என நிரூபித்து உள்ளது. இதனால் மீண்டும் வெற்றி பெற தீவிர முனைப்பு காட்டுகிறது.

தேசிய அளவில் கூட்டணி, மாநில அளவில் எதிர்த்து போட்டி:

காங்கிரசும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் இந்தியா கூட்டணியில் இடம் பெற்று உள்ளது. இருப்பினும், கேரளாவில் இரு கட்சியினரும் எதிர்த்து போட்டியிடுகின்றனர்.

டி.ராஜா மனைவி போட்டி

இந்த முறை ராகுல்காந்தியை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜா போட்டியிடுகிறார். தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பிருந்தே ஆனி ராஜா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

பா.ஜ.க. மாநில தலைவர்

இவர்கள் இருவருக்கும் சவால் விடுக்கும் வகையில், மண்ணின் மைந்தரான பா.ஜ.க. மாநில தலைவர் கே.சுரேந்திரன் நிறுத்தப்பட்டு உள்ளார். இதனால் கடந்த முறை போல் இந்த முறை ராகுல்காந்தி எளிதாக வெற்றி பெறுவது கடினம். வயநாடு தொகுதியில் நட்சத்திர வேட்பாளர்கள் களம் காண்பதால், மும்முனை போட்டி நிலவுகிறது.

ராகுல்காந்தி வயநாட்டில் போட்டியிடுவதன் மூலம் தேசிய அரசியலில் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கும். இந்த தொகுதி நாடே எதிர்பார்க்கும் தொகுதியாக மாறிவிட்டது. இந்த முறை களம் மாறும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். நாடே எதிர்பார்க்கும் வயநாட்டில் வாகை சூடப்போவது யார் என்பது ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கையின்போது தெரிந்துவிடும்.

Tags:    

மேலும் செய்திகள்