விலங்கு கழிவில் இருந்து கோதுமையை எடுத்து உண்ட நிலைமை மாறியுள்ளது: பிரதமர் மோடி பேச்சு

காங்கிரஸ் கட்சி வேலையை தாமதப்படுத்துவதிலும், மக்களின் உரிமைகளை பறிப்பதிலும் நிபுணத்துவம் பெற்றது என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.

Update: 2024-05-25 12:27 GMT

காஜிப்பூர்,

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி, ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. வாக்குகள் ஜூன் 4-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதனை தொடர்ந்து, அரசியல் கட்சிகள் தீவிர பிரசார பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் பிரசாரத்தின் ஒரு பகுதியாக, உத்தர பிரதேசத்தின் காஜிப்பூர் நகரில் நடந்த பொது கூட்டம் ஒன்றில் பிரதமர் மோடி இன்று கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது, வேலையை தாமதப்படுத்துவதிலும், மக்களின் உரிமைகளை பறிப்பதிலும் காங்கிரஸ் கட்சி நிபுணத்துவம் பெற்றது.

நம்முடைய வீரம் மிக்க ராணுவ வீரர்கள் ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் பெறுவதற்கு கூட அவர்கள் அனுமதி அளிக்கவில்லை. மோடி வந்ததும் ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் அமல்படுத்தப்பட்டது என்று பேசியுள்ளார்.

தொடர்ந்து அவர் பேசும்போது, காஜிப்பூருக்கு இந்தியா கூட்டணி துரோகம் செய்து விட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர், இந்த பகுதியை முன்னேற்றமாட்டோம் என்று காங்கிரஸ் கட்சி சபதமெடுத்தது.

இந்த பகுதி மக்கள் வறுமையில் வாழும் நிலைமைக்கு தள்ளப்பட்டனர். காஜிப்பூரின் நிலைமை பற்றி முதன்முறையாக நம்முடைய கவ்மாரி பாபுவால் எடுத்துரைக்கப்பட்டது.

நாடாளுமன்றத்தில் அவர் நேருவிடம் காஜிப்பூரின் நிலைமையை பற்றி கூறினார். மக்கள், விலங்கு கழிவில் இருந்து கோதுமையை எடுத்து எப்படி சாப்பிட்டனர் என்று கண்ணீருடன் எடுத்து கூறினார்.

ஆனால், காங்கிரஸ் கட்சி என்ன செய்தது... அதில் கூட அக்கட்சி அரசியல் சந்தர்ப்பவாதங்களில் ஈடுபட்டது. இன்றோ, ஒவ்வொரு ஏழைக்கும் எங்களுடைய அரசு இலவச ரேஷன் வழங்கி வருவது என்பதில் நான் திருப்தியடைகிறேன் என்று அவர் பேசியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்