மேகதாது திட்டத்துக்கு மத்திய அரசிடம் அனுமதி கேட்போம் - பிரதமர் மோடி முன்னிலையில் தேவகவுடா பேச்சு

28 தொகுதிகளிலும் வெற்றிபெற்றால் மத்திய அரசிடம் மேகதாது திட்டத்துக்கு அனுமதி தாருங்கள் என கேட்போம் என்று தேவகவுடா தெரிவித்தார்.

Update: 2024-04-20 23:32 GMT

பெங்களூரு,

நாடாளுமன்ற தேர்தலையொட்டி சிக்பள்ளாப்பூரில் நேற்று பா.ஜனதாவின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார்.

இதில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் பிரதமரும், ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவருமான தேவகவுடா, "பெங்களூருவில் ஒரு டேங்கர் நீருக்கு ரூ.2,500 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசு 5 உத்தரவாத திட்டங்களை அமல்படுத்தியுள்ளது. அத்துடன் காங்கிரஸ் கட்சி தற்போது 25 உத்தரவாத திட்டங்களை அறிவித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் காங்கிரஸ் கட்சியால் எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியவில்லை. இத்தகைய மோசமான நிலைக்கு தான் காங்கிரஸ் தள்ளப்பட்டுள்ளது.

400 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று திட்டமிட்டுள்ள பிரதமர் மோடியை தோற்கடிக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. பிரதமர் மோடியின் கரங்களை வலுப்படுத்த கர்நாடகத்தில் சிக்பள்ளாப்பூர், கோலார் உள்பட 28 தொகுதிகளிலும் பா.ஜனதா கூட்டணி கட்சிகளை வெற்றி பெற வைத்து எம்.பி.க்களை டெல்லிக்கு அனுப்ப வேண்டும். இதற்காக நீங்கள் உழைக்க வேண்டும்.

இந்த வெற்றிக்கு பிறகு பிரதமர் மோடியிடம் காவிரி, கிருஷ்ணா நீரை தாருங்கள் என்று கேட்போம். அதாவது மேகதாது திட்டத்துக்கு அனுமதி தாருங்கள் என்று மத்திய அரசிடம் கேட்போம்" என்று அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்