சாம் பிட்ரோடாவின் பரம்பரை வரி கருத்துக்கும், எங்களுக்கும் தொடர்பில்லை: காங்கிரஸ் கட்சி
சாம் பிட்ரோடா உலகம் முழுவதற்கும் ஒரு தலைவராக, நண்பராக, தத்துவவாதியாக மற்றும் வழிகாட்டியாக உள்ளார் என ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்து இருக்கிறார்.;
புதுடெல்லி,
காங்கிரஸ் கட்சியின் இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரசின் தலைவரான சாம் பிட்ரோடா, அமெரிக்காவில் பரம்பரை வரி சட்டம் மற்றும் சொத்துகளை மறுபகிர்வு செய்யும் விவகாரம் பற்றி குறிப்பிட்டு பேசினார். இது இந்திய அரசியலில் சர்ச்சையாகி எதிரொலித்து உள்ளது. சத்தீஷ்காரில் பிரசாரத்தின்போது பேரணியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, காங்கிரசை தாக்கி பேசினார்.
அப்போது அவர், காங்கிரசின் ஆபத்துக்குரிய நோக்கங்கள் மீண்டும் நம் முன்னே வெளிவந்துள்ளன. பெற்றோரிடம் இருந்து அவர்களுடைய குழந்தைகளுக்கு கிடைக்கும் சொத்துகள் மீது பரம்பரை வரி விதிப்பது பற்றி காங்கிரசார் பேசி வருகின்றனர் என கூறினார்.
இந்நிலையில், பிட்ரோடாவின் பரம்பரை வரி பற்றிய பேச்சுக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. பிரதமர் மோடியின் கெட்ட நோக்கத்துடனான தேர்தல் பிரசாரத்தில் இருந்து திசை திருப்பும் முயற்சியே இதனை பரபரப்பாக்குவதற்கு காரணம் என்றும் கூறியது.
இதுபற்றி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டு உள்ள எக்ஸ் சமூக ஊடக பதிவில், பிட்ரோடா உலகம் முழுவதற்கும் ஒரு தலைவராக, நண்பராக, தத்துவவாதியாக மற்றும் வழிகாட்டியாக உள்ளார். இந்தியாவின் வளர்ச்சிக்கு எண்ணற்ற மற்றும் உறுதியான முறையில் பங்காற்றியிருக்கிறார்.
பிட்ரோடா சில விவகாரங்களில் வலிமையான விசயங்களாக என்ன உணருகிறாரோ, அதனை அவருடைய கருத்துகளாக வெளிப்படையாக தெரிவிக்கிறார். ஜனநாயகத்தில், ஒரு தனிநபர் தன்னுடைய பார்வைகளை பற்றி ஆலோசிக்க, வெளிப்படுத்த மற்றும் விவாதிக்க நிச்சயம் சுதந்திரம் உள்ளது.
இதனால், பிட்ரோடாவின் பார்வைகள் எப்போதும் இந்திய தேசிய காங்கிரசின் நிலைப்பாட்டை எதிரொலிக்கிறது என்று அர்த்தம் இல்லை. பல விசயங்களில் அப்படி எதுவும் இல்லை.
அவருடைய கருத்துகளை தற்போது பரபரப்பாக்குவது என்பது நரேந்திர மோடியின் தீங்கு ஏற்படுத்தும் மற்றும் விஷமம் நிறைந்த தேர்தல் பிரசாரத்தில் இருந்து திசை திருப்புவதற்கான வெளிப்படையான மற்றும் நம்பிக்கையற்ற முயற்சிகள் ஆகும். பிரதமரின் பேச்சுகள், அதிகளவிலான பொய்களை மட்டுமே கொண்டிருக்கிறது என தெரிவித்து உள்ளார்.