'அன்புக்கு வாக்கு செலுத்துங்கள்; வெறுப்புக்கு அல்ல' - மல்லிகார்ஜுன கார்கே

வெறுப்புக்கு பதிலாக அன்புக்கு வாக்கு செலுத்துங்கள் என வாக்காளர்களிடம் மல்லிகார்ஜுன கார்கே கேட்டுக் கொண்டுள்ளார்.;

Update: 2024-05-20 10:12 GMT

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதுவரை 4 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. இதைத் தொடர்ந்து 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளுக்கு இன்று 5-ம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது 'எக்ஸ்' வலைதள பக்கத்தில் வாக்களர்களுக்கு விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது;-

"ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் பாதுகாக்க வேண்டுமானால் வாக்களிக்க வேண்டும். வாக்குப்பதிவு இயந்திரத்தில் உங்கள் வாக்கை செலுத்துவதற்கு முன், நாம் அன்பு மற்றும் சகோதரத்துவத்திற்காக வாக்களிக்க வேண்டும், வெறுப்புக்காக அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

வேலையின்மை மற்றும் பணவீக்கத்திற்கு எதிராக நாம் வாக்களிக்க வேண்டும், ஒரு சில முதலாளிகளை பணக்காரர்களாக ஆக்குவதற்காக அல்ல. நமது உரிமைகளை பறிப்பவர்களுக்கு வாக்களிக்காமல், நமது அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதற்காக வாக்களிக்க வேண்டும்.

ஜனநாயகத்திற்கு வாக்களியுங்கள், சர்வாதிகாரத்திற்காக அல்ல. ஏற்கனவே சர்வாதிகாரத்தின் நாற்காலி நிலைகுலைந்துவிட்டது. இந்நிலையில் நீங்கள் செலுத்தும் வாக்கு, ஜனநாயகத்தை மேலும் வலிமைப்படுத்தும்.

முதல் முறையாக வாக்களிப்பவர்களுக்கு வரலாற்றுப் பொறுப்பு உள்ளது. ஏற்கனவே நடந்து முடிந்த 4 கட்ட தேர்தல்களின் போக்கு பா.ஜனதா அரசு வெளியேறுவது உறுதி என்பதைக் காட்டுகிறது. இன்று நடைபெறுவது அவர்களை வழியனுப்புவதற்கான ஐந்தாவது படி. ஜூன் 4 முதல் புதிய தொடக்கம் ஏற்படும்."

இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்