இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேண்டுகோள்
நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேண்டுகோள் விடுத்துள்ளது.;
சென்னை,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வருகிற நாடாளுமன்ற தேர்தல் இந்திய வரலாற்றில் மிக, மிக முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல். கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜனதா கூட்டணி அரசு, இந்திய குடியரசின் நான்கு அடிப்படை தூண்களாக அமைந்துள்ள மதச்சார்பற்ற ஜனநாயகம், பொருளாதார இறையாண்மை, கூட்டாட்சி மற்றும் சமூக நீதி ஆகியவற்றை திட்டமிட்ட முறையில் தகர்த்து வருகிறது.
இந்திய அளவில் பா.ஜனதா அரசுக்கு எதிராக உருவாக்கப்பட்டுள்ள 'இந்தியா' கூட்டணி, தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் தேர்தலை சந்திக்கிறது. மாநில உரிமைகளுக்காக குரல் கொடுத்து வருகிற, மக்கள் நலன் காக்க பல்வேறு சிறந்த திட்டங்களை அமல்படுத்தி வருகிற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான 'இந்தியா' கூட்டணி தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் போட்டியிடும் 40 தொகுதிகளின் வெற்றி வேட்பாளர்களுக்கு வாக்களித்து வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை தமிழக மக்கள் வழங்கிட இரு கரம் கூப்பி வேண்டுகோள் விடுக்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.