ஜூன் 4-ந்தேதி பா.ஜனதாவின் வெற்றிக் கொண்டாட்டத்துக்கு தொண்டர்கள் தயாராக இருக்க வேண்டும் - அண்ணாமலை

வருகிற ஜூன் 4-ந்தேதிக்கு பிறகு, இந்தியாவில் வடக்கு-தெற்கு என்ற பேச்சு முடிந்துவிடும் என்று பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.;

Update:2024-05-27 23:10 IST

சென்னை,

இந்தியாவில் 18-வது நாடாளுமன்றத்தை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில், முதல் கட்டமாக தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 19-ந்தேதி தேர்தல் நடைபெற்று முடிந்தது. நாடுமுழுவதும் தற்போது வரை 6 கட்ட தேர்தல்கள் நிறைவு பெற்றுள்ளன. வாக்கு எண்ணிக்கை அடுத்த மாதம் (ஜூன்) 4-ந்தேதி நடைபெறுகிறது.

இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் வாக்குபதிவுக்கு பிறகு, முதன்முறையாக, தமிழக பா.ஜனதா மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மத்திய இணை-மந்திரி எல்.முருகன், தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், பா.ஜனதா மூத்த தலைவர் எச்.ராஜா, தமிழக பா.ஜனதா இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, துணைத் தலைவர்கள் கரு.நாகராஜன், பால்கனகராஜ், நாராயண திருப்பதி, மாநில செயலாளர்கள் கராத்தே தியாகராஜன், பிரமிளா சம்பத், மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் தமிழக பா.ஜனதா வேட்பாளர்கள் உள்பட பல்வேறு நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், மாவட்ட தலைவர்கள் மற்றும் தேர்தல் பொறுப்பாளர்கள், நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்த தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். மேலும், தேர்தலில் வார்டு வாரியாக நிர்வாகிகளின் செயல்பாடுகள் குறித்து நிர்வாகிகளின் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். அவற்றை, மாநில தலைவர் அண்ணாமலை குறிப்புகளாக எடுத்துக் கொண்டார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில், பேசிய தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, "தமிழகத்தில் வாக்குபதிவு முடிந்து வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதற்குள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் கனவு வந்துவிடும். அவருடன் இருப்பவர்கள் மத்திய அமைச்சரவை குறித்து பேசி வருகிறார்கள். வெற்றி பெற்றால் முதல்-அமைச்சர்தான் துணை பிரதமர் என்கின்ற அளவுக்கு பேசுகிறார்கள். தமிழகத்தின் எல்லையை கடந்தால், 'இந்தியா' கூட்டணி கட்சிகள் தங்களின் தோல்வியை ஒப்புக் கொண்டு, தேர்தல் எப்போது முடியும் என்று காத்திருக்கிறார்கள்.

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா டெல்லியில் 60 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெறும். கேரளாவில் சரித்திர சாதனை படைக்கும். தெலுங்கானாவில் 10 இடங்களை கடந்து வெற்றி பெறும். சதவீதத்திலும் முதல் கட்சியாக மாறும். கர்நாடகாவில் 28 இடங்களிலும் பா.ஜனதா வெற்றி பெறும். ஆந்திராவில் பெரிய மாற்றம் இருக்கும். புதுச்சேரியிலும் பா.ஜனதா வெற்றி உறுதி. இப்படி, தென்னிந்தியாவிலேயே பா.ஜனதா அதிகளவு வெற்றிகளை குவிக்கும்.

வருகிற ஜூன் 4-ந்தேதிக்கு பிறகு, இந்தியாவில் வடக்கு-தெற்கு என்ற பேச்சு முடிந்துவிடும். அதன்பிறகு, முழுமையாக விஸ்தாரமாக இந்தியா முழுவதும் பா.ஜனதா படர்ந்து இருக்கும். தொடர்ந்து, 3-வது முறையாக பா.ஜனதா ஆட்சி அமைக்கும். ஜூன் 4-ந்தேதி வெற்றிக் கொண்டாட்டத்துக்கு தொண்டர்கள் தயாராக இருக்க வேண்டும். பா.ஜனதா 3-வது முறையாக ஆட்சிக்குவர வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா 1991-ம் ஆண்டு தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது, 'தேர்தல் நேரத்தில் இந்தியாவில் சட்டம் ஒழுங்கு சார்ந்த விஷயங்கள் என்பது இரண்டு சாதிகள், மதங்கள் இடையேதான் நடக்கும். தமிழகத்தில்தான், நாட்டுக்கு எதிரான சக்திகளுக்கும், நாட்டிற்கு ஆதரவான சக்திகளுக்கும் இடையே சண்டை நடைபெறும். அதை நான் கடுமையாக எதிர்ப்பேன்' என்று தெரிவித்திருந்தார். தற்போது தமிழகத்தில், நாட்டை எதிர்க்கும் ஆதிக்க சக்திகள் மிகவும் அதிகம். கூட்டணிக்கான கொள்கை இல்லாமல், மோடி எனும் தனி மனிதனை எதிர்க்க கூட்டணி அமைத்துள்ளார்கள்" என்று அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்