உ.பி. மொராதாபாத் மக்களவை தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் மரணம்

உத்தர பிரதேச மொராதாபாத் மக்களவை தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் குன்வர் சர்வேஷ் சிங், தாக்குர்துவாரா சட்டசபை தொகுதியில் இருந்து 4 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.;

Update: 2024-04-20 16:02 GMT

மொராதாபாத்,

உத்தர பிரதேசத்தின் மொராதாபாத் மக்களவை தொகுதிக்கான பா.ஜ.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் குன்வர் சர்வேஷ் சிங் (வயது 71). தொழிலதிபரான இவர் நீண்டநாட்களாக உடல்நல பாதிப்பால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு இருந்த அவர், இன்று மாலை 6.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார்.

கடந்த 19-ந்தேதி நடந்த முதல்கட்ட தேர்தலின்போது, மொராதாபாத் மக்களவை தொகுதிக்கான வாக்கு பதிவு நடைபெற்றது. எனினும், உடல்நல குறைவால் சர்வேஷ் சிங் தேர்தல் பிரசாரம் எதிலும் ஈடுபடவில்லை.

தொண்டையில் ஏற்பட்ட பாதிப்புக்காக அவர் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இந்நிலையில், பரிசோதனைக்காக நேற்று மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இதன்பின், அவர் உயிரிழந்து உள்ளார்.

இதனை உத்தர பிரதேச பா.ஜ.க. தலைவர் பூபேந்திர சவுத்ரி உறுதிப்படுத்தி உள்ளார். தாக்குர்துவாரா சட்டசபை தொகுதியில் இருந்து சர்வேஷ் சிங் 4 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். இவருடைய மகன் குன்வர் சுஷாந்த் சிங், பதாப்பூர் சட்டசபை தொகுதியின் எம்.எல்.ஏ. ஆவார்.

Tags:    

மேலும் செய்திகள்