பா.ஜனதாவுக்கு 8 முறை ஓட்டு போட்டு வீடியோ பதிவிட்ட விவகாரம்: வாலிபர் கைது

8 முறை ஓட்டு போட்ட வீடியோ வைரலாக பரவியநிலையில், சம்பந்தப்பட்ட வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.;

Update:2024-05-20 04:35 IST

புதுடெல்லி,

உத்தரபிரதேசத்தின் பரூக்காபாத் தொகுதியில் பா.ஜனதா சார்பில் முகேஷ்ராஜ்பூதி களம் காண்கிறார். இந்த தொகுதிக்கு 4-ம் கட்டத்தேர்தலாக கடந்த 13-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது. இதில் வாலிபர் ஒருவர் பா.ஜனதா வேட்பாளருக்கு 8 முறை ஓட்டுப்போடுவது போன்ற காட்சி சமூகவலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

வாக்குச்சாவடிக்குள் செல்போன் கொண்டு செல்லவும், வாக்காளர் ஓட்டுப்போடுவதை படம் பிடிக்கவும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. ஆனால் இந்த வாலிபர் சர்வசாதாரணமாக பா.ஜனதாவுக்கு 8 முறை ஓட்டுப்போட்ட காட்சி வெளியானது.

இந்த வீடியோவை அகில இந்திய காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ 'எக்ஸ்' பக்கத்தில் பகிர்ந்து, ' தேர்தல் ஆணையமே, இந்த வீடியோவை பார்த்தீர்களா?, ஒரு நபர் 8 முறை ஓட்டுப்போடுகிறார். நீங்கள் விழித்திருக்க வேண்டிய நேரம் இது.' என்று பதிவிடப்பட்டிருந்தது.

இதேபோல் சமாஜ்வாடி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ்வும், தனது 'எக்ஸ்' பக்கத்தில் வீடியோவை பதிவிட்டு, 'இது தவறு என்று தேர்தல் ஆணையம் உணர்ந்தால், கண்டிப்பாக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால்... பா.ஜனதாவின் பூத் கமிட்டி உண்மையில் கொள்ளை கமிட்டிதான்' என்று பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் 8 முறை ஓட்டுபோட்ட வீடியோ வெளியிட்ட ராஜன் சிங் என்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து வாக்குப்பதிவு மையத்தில் தேர்தல் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரப்பிரதேச தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் மறு வாக்குப்பதிவு நடத்தவும் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்