நாடாளுமன்ற தேர்தலில் 'பா.ஜனதா ஏற்படுத்திய வேலையில்லா திண்டாட்டம்' மிகப்பெரிய பிரச்சினை - கார்கே
‘இளைஞர் நீதி’யின் கீழ் காங்கிரஸ் கட்சி ‘முதல் வேலை உறுதி' உத்தரவாதத்தை வழங்கி இருப்பதாக மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.;
புதுடெல்லி,
நாடு முழுவதும் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து இருப்பதாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இதை போக்கும் வகையில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, தொழிற்பயிற்சி உள்ளிட்ட திட்டங்களை தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் அறிவித்து உள்ளது.இந்த வேலையின்மை பிரச்சினையை முன்வைத்து மத்திய அரசை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சாடியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், "பா.ஜனதா உருவாக்கி இருக்கும் வேலையில்லா திண்டாட்டம்தான் இந்த நாடாளுமன்ற தேர்தலில் முக்கிய பிரச்சினையாக இருக்கும். வேலை தேடுவதில் நமது இளைஞர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மக்கள் தொகை பிரச்சினை நாம் பார்க்கும் கொடுங்கனவாக இருக்கிறது. இந்தியாவின் 12 ஐ.ஐ.டி.களில் சுமார் 30 சதவீத மாணவர்கள் வழக்கமான வேலைவாய்ப்புகளைப் பெறவில்லை. 21 ஐ.ஐ.எம்.களில் 20 சதவீதம் மட்டுமே இதுவரை கோடைகால வேலைவாய்ப்புகளை முடிக்க முடிந்தது.
ஐ.ஐ.டி. மற்றும் ஐ.ஐ.எம்.களில் இதுதான் நிலை என்றால், நாடு முழுவதும் உள்ள நமது இளைஞர்களின் எதிர்காலத்தை பா.ஜனதா எப்படி அழித்துவிட்டது என்பதை கற்பனை செய்யலாம்.
கடந்த 2014-ம் ஆண்டு முதல் இளைஞர்களின் வேலையில்லா திண்டாட்டத்தை மத்திய அரசு 3 மடங்காக அதிகரிக்கச் செய்து விட்டது. ஒவ்வொரு ஆண்டும், இந்தியா சுமார் 70 முதல் 80 லட்சம் இளைஞர்களை தொழிலாளர் அணியில் சேர்ப்பதாகவும், ஆனால் 2012 மற்றும் 2019-க்கு இடையில், வேலையில் கிட்டத்தட்ட பூஜ்ஜிய (0.01 சதவீதம்) வளர்ச்சியே இருந்ததாகவும் ஐ.எல்.ஓ.வின் சமீபத்திய வேலைவாய்ப்பு அறிக்கை கூறுகிறது.
ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு என்ற மோடியின் உத்தரவாதம் நமது இளைஞர்களின் இதயத்திலும், மனதிலும் கெட்ட கனவாக மாறிவிட்டது.
எனவேதான் 'இளைஞர் நீதி'யின் கீழ் காங்கிரஸ் கட்சி 'முதல் வேலை உறுதி' உத்தரவாதத்தை வழங்கி இருக்கிறது.
டிப்ளமோ அல்லது டிகிரி முடித்த 25 வயதுக்கு உட்பட்டவர்கள் இனி வேலை கோருவதற்கான சட்ட உரிமையை பெறுகின்றனர். அத்துடன் ரூ.1 லட்சம் ஊக்கத்தொகையும் பெறுவார்கள். இது வேலை மற்றும் கற்றலைப் பிரிக்கும் தடைகளை நீக்கி, தொழில் வளர்ச்சிக்கான புதிய வழிகளைத் திறக்கும்" என்று அதில் மல்லிகார்ஜுன கார்கே பதிவிட்டுள்ளார்.