உங்கள் ஒரு வாக்கின் வலிமையை புரிந்து கொள்ளுங்கள் - ராகுல் காந்தி பதிவு
'இந்தியா' கூட்டணிக்கான உங்கள் ஒவ்வொரு வாக்கும் வலுவான ஜனநாயகத்தையும், அதிகாரம் பெற்ற குடிமக்களையும் உருவாக்கும் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார்.;
புதுடெல்லி,
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
"உங்கள் ஒரு வாக்கின் வலிமையை புரிந்து கொள்ளுங்கள்! உங்கள் ஒரு வாக்கு, நாடு முழுவதும் நடக்கும் பயங்கரமான பாகுபாடு மற்றும் அநீதியை அகற்றும். உங்கள் ஒரு வாக்கு ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் 30 லட்சம் அரசுப் பணிகளுக்கான ஆட்சேர்ப்புப் பணிகளை தொடங்க வைக்கும். உங்கள் ஒரு வாக்கு ஜூலை 1 முதல் ஏழைப் பெண்களின் கணக்கில் மாதம் ரூ.8,500 டெபாசிட் செய்ய வைக்கும்.
உங்கள் ஒரு வாக்கு உங்களுக்கு உரிமைகளை வழங்கும் அரசியலமைப்பை பாதுகாக்கும். உங்கள் ஒரு வாக்கு மூலம் உங்கள் அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கும் உரிமையைப் பாதுகாப்பது, ஜனநாயகத்தைக் காப்பாற்றும். உங்கள் ஒரு வாக்கு தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைகள், பங்கேற்பு மற்றும் இடஒதுக்கீட்டை பாதுகாக்கும். உங்கள் ஒரு வாக்கு பழங்குடியினரின் நீர், காடு மற்றும் நிலத்தின் மீதான உரிமைகளைப் பாதுகாக்கும்.
'இந்தியா' கூட்டணிக்கான உங்கள் ஒவ்வொரு வாக்கும் வலுவான ஜனநாயகத்தையும், அதிகாரம் பெற்ற குடிமக்களையும் உருவாக்கும்" இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.