நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு: ராஜ் தாக்கரே அறிவிப்பு

பிரதமர் மோடிக்காக மட்டுமே ஆதரவு அளிக்கிறோம் என்று ராஜ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

Update: 2024-04-10 07:16 GMT

Image Courtesy: PTI

மும்பை,

மராட்டியத்தில் பா.ஜனதா தலைமையிலான கூட்டணி ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் உள்ளன. இந்த கூட்டணியில் ராஜ்தாக்கரே தலைமையிலான நவநிர்மாண் சேனா கூட்டணியையும் சேர்க்க பா.ஜனதா ஆர்வம் காட்டியது.

இதுதொடர்பாக பா.ஜனதா தலைவர்கள், ராஜ்தாக்கரேயை சந்தித்து பேசினர். மேலும் ராஜ்தாக்கரேவும் டெல்லி சென்று உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார். எனினும் ராஜ் தாக்கரே பா.ஜனதா கூட்டணி தொடர்பாக எதுவும் பேசாமல் இருந்தார்.

இந்தநிலையில் சிவாஜி பார்க்கில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராஜ் தாக்கரே பேசியதாவது:-

2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நாட்டுக்கு மிக முக்கியமானது. இந்த தேர்தல் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்க உள்ளது. எனவே நவநிர்மாண் சேனா பா.ஜனதா கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கிறது. எங்களுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி தேவையில்லை. நாங்கள் வேறு எதையும் கேட்டு பேரம் பேசபோவதும் இல்லை. பிரதமர் மோடிக்காக மட்டுமே நாங்கள் ஆதரவு அளிக்கிறோம்.

எல்லோரும் சட்டசபை தேர்தலுக்கு தயாராக இருங்கள். பால் தாக்கரே தவிர வேறு எந்த தலைமைக்கு கீழும் நான் வேலை செய்ய மாட்டேன். நான் உருவாக்கிய நவநிர்மாண் சேனா கட்சியின் தலைவராக தான் இருப்பேன். நாடாளுமன்ற தேர்தலில் என்னை வேறு சின்னத்தில் போட்டியிடுமாறு கூறினார்கள். நான் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. எனது கட்சியின் சின்னத்துடன் நான் சமரசம் செய்து கொள்ளமாட்டேன். எந்த கட்சியை உடைத்தும் அதன் தலைவராக விரும்ப மாட்டேன். இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்