நாடு முழுவதும் பொதுசிவில் சட்டம் அமல்படுத்தப்படும் - அமித்ஷா
பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்த உடன் நாடு முழுவதும் பொதுசிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.;
டெல்லி,
நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி, 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் கடந்த மாதம் 19ம் தேதியும், 88 தொகுதிகளுக்கு 2ம் கட்ட தேர்தல் கடந்த மாதம் 26ம் தேதியும், 93 தொகுதிகளுக்கு கடந்த 7ம் தேதி 3ம் கட்ட தேர்தலும், 96 தொகுதிகளுக்கு கடந்த 13ம் தேதி 4ம் கட்ட தேர்தலும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து 49 தொகுதிகளுக்கு கடந்த 20ம் தேதி 5ம் கட்ட தேர்தல் நடைபெற்றது. மேலும், 58 தொகுதிகளுக்கு நேற்று 6ம் கட்ட தேர்தல் நடைபெற்றது.
6 கட்ட தேர்தலில் ஒட்டுமொத்தமாக 486 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் எஞ்சிய 57 தொகுதிகளுக்கு இறுதிகட்டமான 7ம் கட்ட தேர்தல் வரும் 1ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளன. இறுதிகட்ட தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பிடிஐ செய்தி முகமைக்கு உள்துறை மந்திரியும், பா.ஜ.க. மூத்த தலைவரான அமித்ஷா பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் அரசியலமைப்பை உருவாக்கியவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களால் பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்தும் பொறுப்பு எங்களிடம் (பா.ஜ.க.) கொடுக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பு சபையால் நமக்காக தீர்மானிக்கப்பட்ட வழிகாட்டும் கொள்கைகளில் பொதுசிவில் சட்டமும் அடங்கும். மதச்சார்பற்ற நாட்டில் மதத்தின் அடிப்படையில் சட்டம் இருக்கக்கூடாது என்று சட்ட அறிஞர்கள் ராஜேந்திர பிரசாத், அம்பேத்கர், முன்ஷி போன்றோர் கூறியுள்ளனர். பொது சிவில் சட்டம் இருக்க வேண்டும்.
பொது சிவில் சட்டம் என்பது சமூக, சட்ட மற்றும் மதத்தின் அடிப்படையிலான மிகப்பெரிய சீர்திருத்தமாகும். உத்தரகாண்ட்டில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பொதுசிவில் சட்டம் அமல்படுத்துவது பா.ஜ.க.வின் நோக்கம் என்று தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளோம். மத்தியில் பா.ஜ.க. ஆட்சி மீண்டும் அமைந்த உடன் அடுத்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் பொதுசிவில் சட்டம் அமல்படுத்தப்படும். பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்த 5 ஆண்டுகள் போதுமானது. ஒரேநாடு ஒரேதேர்தல் முறையை அமல்படுத்தவும் நாங்கள் அனைத்து முயற்சியையும் எடுப்போதும்
இவ்வாறு அவர் கூறினார்.