ரூ.30 ஆயிரம் கோடியை களவாட முயன்ற திரிணாமுல் காங்கிரஸ்: பிரதமர் மோடி பரபரப்பு குற்றச்சாட்டு
ஏழைகள் வீடு கட்ட மத்திய அரசு அனுப்பிய ரூ.30 ஆயிரம் கோடியை திரிணாமுல் காங்கிரசார், அந்த பணம் முதலில், தங்களுடைய தலைவர்களின் வங்கி கணக்கில் வந்து விழ வேண்டும் என்றனர் என பிரதமர் மோடி குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
ஜல்பைகுரி,
மேற்கு வங்காளத்தில் ஜல்பைகுரி நகரில் இன்று நடந்த பொது கூட்டமொன்றில் கலந்து கொண்டு பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர், எங்களுடைய அரசின் திட்டங்கள் ஏழைகளின் வாழ்வை எளிமையாக்கி உள்ளது. அவர்களின் சுயமரியாதையை உயர்த்தி, பெருமையை நாங்கள் அதிகரிக்க செய்திருக்கிறோம்.
10 ஆண்டுகால மோடியின் வளர்ச்சி பணி வெறும் டிரெய்லர்தான். நாட்டை இன்னும் முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டிய தேவை உள்ளது. உலகில் 3-வது பெரிய பொருளாதார சக்தியாக இந்தியாவை மாற்ற வேண்டும் என்றார்.
சந்தேஷ்காளி விவகாரத்தில் பெண்கள் மீது ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் செய்த அராஜகங்களை ஒட்டுமொத்த நாடே பார்த்தது என்று குற்றச்சாட்டாகவும் கூறியுள்ளார்.
ஏழைகள் வீடு கட்ட ரூ.30 ஆயிரம் கோடியை மத்திய அரசு அனுப்பியது. அந்த பணம் நேரடியாக பயனாளர்களின் வங்கி கணக்கிற்கு செல்ல வேண்டும் என மோடி கூறினார். ஆனால், திரிணாமுல் காங்கிரசோ, அந்த பணம் முதலில், தங்களுடைய தலைவர்களின் வங்கி கணக்கில் வந்து விழ வேண்டும் என்றனர்.
இப்போது நீங்கள் கூறுங்கள். பொது நிதியை திரிணாமுல் காங்கிரஸ் களவாட நான் எப்படி விடமுடியும்? என்று பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார்.
ஒவ்வொரு சகோதரியின் வீட்டுக்கும் குழாய் குடிநீர், இலவச கியாஸ் இணைப்புகளை வழங்க விரும்புகிறேன். ஏழை நோயாளிகள் ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை பெற வேண்டும். ஆனால், ஊழல், ஏழை விரோத திரிணாமுல் காங்கிரஸ் அரசு இதனை அமல்படுத்த விடாமல் தடையாக உள்ளது என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.