'போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள் நாட்டை வழிநடத்த விரும்புகிறார்கள்' - ராகுல் காந்தி மீது ராஜ்நாத் சிங் விமர்சனம்
அமேதி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடாதது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் விமர்சித்துள்ளார்.
சண்டிகர்,
நாடாளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ராகுல் காந்தி போட்டியிட உள்ளார். ஏற்கனவே கேரளாவின் வயநாடு தொகுதியில் களமிறங்கியுள்ள ராகுல் காந்தி, 2-வதாக ரேபரேலி தொகுதியிலும் போட்டியிடுகிறார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் கிஷோர் லால் சர்மா களமிறங்கியுள்ளார். பா.ஜ.க. சார்பில் அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி போட்டியிடுகிறார்.
அமேதி தொகுதியில் இருந்து 3 முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட ராகுல் காந்தி, கடந்த 2019 மக்களவை தேர்தலில் அமேதியில் பா.ஜ.க. வேட்பாளர் ஸ்மிருதி இரானியிடம் தோல்வியடைந்தார். அதே சமயம் கேரளாவின் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி வெற்றி பெற்றார்.
இந்நிலையில் ராகுல் காந்தி இந்த முறை அமேதியில் போட்டியிடாதது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் விமர்சித்துள்ளார். இது குறித்து அரியானாவின் ரோட்டாக் பகுதியில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது;-
"ராகுல் காந்தி இந்த முறை அமேதி தொகுதியில் போட்டியிட வேண்டும் என காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பலர் விரும்பினர். ஆனால் போர்க்களத்தில் இருந்து தப்பியோட வேண்டும் என ராகுல் காந்தி முடிவு செய்துவிட்டார். இப்படிப்பட்ட நபர்கள் நாட்டை வழிநடத்த விரும்புகின்றனர்.
பயங்கரவாதத்தை நாட்டின் எல்லைக்கு உள்ளேயும், வெளியேயும் நம்மால் அழிக்க முடியும் என்பதை நாம் நிரூபித்துள்ளோம். சுதந்திரத்திற்குப் பிறகு காங்கிரஸ் கலைக்கப்பட வேண்டும் என்றும், அரசியலில் ஈடுபடக்கூடாது என்று மகாத்மா காந்தி விரும்பினார். அவரது விருப்பத்தை இந்த தேர்தலில் மக்கள் நிறைவேற்றி பிரதான எதிர்க்கட்சியை ஒழிக்க வேண்டும்.
பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா வலுவான நாடாக உருவெடுத்துள்ளது. அதன் குரல் உலகளவில் கேட்கப்படுகிறது. உலகின் 5-வது மிக்கப்பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறியுள்ளது. 25 கோடிக்கும் அதிகமான மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்."
இவ்வாறு ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.