'பெண்களை மதிக்காதவர்கள், பெண்களின் நலனுக்காக உழைப்பார்களா?' - காங்கிரஸ் மீது கங்கனா ரணாவத் விமர்சனம்

காங்கிரஸ் கட்சியினர் பெண்களை மதிப்பதில்லை என்று நடிகை கங்கனா ரணாவத் விமர்சித்தார்.

Update: 2024-04-02 19:41 GMT

சிம்லா,

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பா.ஜ.க. சார்பில் நடிகை கங்கனா ரணாவத் போட்டியிடுகிறார். இதனிடையே காங்கிரஸ் நிர்வாகி சுப்ரியா ஸ்ரீனேட்டின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை கங்கனா ரணாவத் குறித்து வெளியான சர்ச்சைக்குரிய பதிவுக்கு பலர் கண்டனம் தெரிவித்தனர்.

அந்த பதிவை உடனடியாக நீக்கிய சுப்ரியா ஸ்ரீனேட், தனது சமூக வலைதளத்தை பயன்படுத்தி யாரோ அந்த பதிவை வெளியிட்டுள்ளதாக விளக்கமளித்தார். இந்த நிலையில், மண்டி தொகுதியில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய நடிகை கங்கனா ரணாவத், காங்கிரஸ் கட்சியினர் பெண்களை மதிப்பதில்லை என்று விமர்சித்தார். மேலும் இது குறித்து அவர் பேசியதாவது;-

"மண்டி தொகுதியில் இருந்து பா.ஜ.க. வேட்பாளராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டது எனது அதிர்ஷ்டமாகும். நாம் இந்த உலகின் மிகப்பெரிய கட்சியின் உறுப்பினர்கள். பிரதமர் மோடி சாதாரண மனிதர் கிடையாது. அவர் சர்வதேச அளவில் மிகவும் புகழ்பெற்ற தலைவர் ஆவார்.

மக்களவை தேர்தலில் நாம் நமது பிரதமரை தேர்ந்தெடுக்க வேண்டும். அதே சமயம், மண்டி தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக நிறுத்துவதற்கு மண்டியின் மகளையே அவர் தேர்ந்தெடுத்துள்ளார். நாம் அவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.

ஆனால் காங்கிரஸ் கட்சி, மண்டியின் மகள்கள் குறித்து தவறாக விமர்சிக்கிறது. பெண்களை மதிக்காதவர்கள், பெண்களின் நலனுக்காக உழைப்பார்களா? அவர்கள் நாட்டை சீரழித்துவிட்டனர். பெண்களின் முன்னேற்றத்திற்காக பிரதமர் மோடி கடுமையாக உழைத்துள்ளார்."

இவ்வாறு கங்கனா ரணாவத் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்