'இந்தியாவை மாபெரும் உலக சக்தியாக மாற்றுவதற்கான தேர்தல் இது' - பிரதமர் மோடி
தற்போது நடைபெறுவது அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவை மாபெரும் உலக சக்தியாக மாற்றுவதற்கான தேர்தல் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
போபால்,
நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாடு முழுவதும் இன்று தொடங்கியுள்ளது. இன்றைய தினம் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்த நிலையில், இந்தியாவை மாபெரும் உலக சக்தியாக மாற்றுவதற்கான தேர்தல் இது என்றும், தற்போதைய உலக சூழலில் இந்தியாவில் ஒரு வலுவான அரசு தேவை என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மத்திய பிரதேச மாநிலம் தாமோ பகுதியில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது;-
"பா.ஜ.க. அரசு நமது பாதுகாப்புப் படைகளை தன்னிறைவு பெறச் செய்துள்ளது. இந்தியா பல நாடுகளுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்கிறது. பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணைகளை இந்தியா ஏற்றுமதி செய்கிறது.
ஏழைகளின் நலனைக் காப்பதில் பா.ஜ.க. அரசு உறுதியாக உள்ளது. சுமார் 80 கோடி பயனாளிகளுக்கு இலவச ரேஷன் திட்டத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது.
தற்போது நடைபெறுவது அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவை மாபெரும் உலக சக்தியாக மாற்றுவதற்கான தேர்தல் ஆகும். தற்போதைய உலக சூழலில் இந்தியாவில் ஒரு வலுவான அரசு இருப்பது அவசியமாகும்."
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.