'அடுத்த 6 மாதங்களில் குடும்ப கட்சிகள் சிதைந்து போவதை இந்த நாடு காணும்' - பிரதமர் மோடி
ஜூன் 4-ந்தேதிக்குப் பிறகு அடுத்த 6 மாதங்களில் குடும்ப கட்சிகள் சிதைந்து போவதை இந்த நாடு காணும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
புவனேஸ்வர்,
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதுவரை 6 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், 7-வது மற்றும் கடைசி கட்ட தேர்தல் வரும் ஜூன் 1-ந்தேதி நடைபெற உள்ளது. தொடர்ந்து ஜூன் 4-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, அன்றைய தினமே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்நிலையில் ஜூன் 4-ந்தேதிக்குப் பிறகு அடுத்த 6 மாதங்களில் குடும்ப கட்சிகள் சிதைந்து போவதை இந்த நாடு காணும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஒடிசா மாநிலம் கேந்திரபாரா பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது;-
"ஜூன் 4-ந்தேதிக்குப் பிறகு, அடுத்த 6 மாதங்களில் ஒரு புதிய உத்வேகத்துடன் நாடு வளர்ச்சியடையும். அதே சமயம், அந்த 6 மாதங்களில் அரசியலில் மிகப்பெரிய சூறாவளியும் வரப்போகிறது. குடும்ப கட்சிகளின் உறுப்பினர்களிடையே பெரும் அதிருப்தி நிலவி வருகிறது. அவர்களது தொடர் தோல்வி குறித்து சொந்த கட்சியினரே கேள்வி எழுப்ப தொடங்கிவிட்டனர். எனவே அடுத்த 6 மாதங்களில் குடும்ப கட்சிகள் சிதைந்து போவதை இந்த நாடு காணும்."
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.