நாடாளுமன்ற தேர்தலுக்குப்பின் அ.தி.மு.க. என்ற கட்சியே இருக்காது; பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன்

நாடாளுமன்ற தேர்தலுக்குப்பின் அ.தி.மு.க. என்ற கட்சியே இருக்காது என்று பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

Update: 2024-03-30 14:13 GMT

மதுரை,

தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் வரும் 19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, நாம் தமிழர் என 4 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

இதனிடையே, மதுரை தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன் போட்டியிடுகிறார்.

இந்நிலையில், மதுரையில் ராம சீனிவாசன் இன்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, தனியார் செய்தி நிறுவனத்திற்கு ராம சீனிவாசன் பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில்,

அ.தி.மு.க. சர்வ வல்லமை வாய்ந்த கட்சி என்று பேசுவீர்களே. ஏதோ ஒன்றரை கோடி உறுப்பினர்களை கொண்ட எக்கு கோட்டை என்று பேசுவீர்களே, என்றைக்கு அ.தி.மு.க. ஒன்றரை கோடி ஓட்டு வாங்கியது. ஜெயலலிதா இல்லாதபோது அ.தி.மு.க. எப்போது ஒன்றரை கோடி ஓட்டு வாங்கியது.

கூட்டணியே வேண்டாம் என்று ஜெயலலிதா தனித்துபோட்டியிட்டாரே, உங்களால் (எடப்பாடி பழனிசாமி) தனித்து போட்டியிடமுடியுமா?

2014 தேர்தலிலேயே நாடும் நமதே நாற்பதும் நமதே என்று ஜெயலலிதா கூறினாரே நீங்கள் கூட்டணி இல்லாமல் எப்போதாவது தேர்தலில் போட்டியிட்டுள்ளீர்களா?

ஜெயலலிதாவுக்கு இருந்த அரசியல் ஆண்மை உங்களுக்கு இருக்கிறதா? நீங்கள் (எடப்பாடி பழனிசாமி) ஏதோ வாள் எடுத்து வீசிக்கொண்டிருக்கிறீர்கள். இந்த தேர்தலுக்குபின் அ.தி.மு.க. என்ற கட்சியே இருக்காது. 2024 நாடாளுமன்ற தேர்தலுக்குப்பின் அ.தி.மு.க. இருக்காது.

ஏனென்றால் அ.தி.மு.க. செல்வாக்கை இழக்க தொடங்கிவிடும். இந்த தேர்தலில் பல தொகுதிகளில் முடிந்தால் எல்லா தொகுதிகளிலும் அ.தி.மு.க. 3வது இடத்திற்குத்தான் செல்லும். விதிவிலக்காக ஒருசில இடங்களில் அ.தி.மு.க. 2வது இடம் செல்லலாம் அல்லது ஒன்றிரண்டு தொகுதிகளில் வெற்றிபெறலாம். ஆனால், அ.தி.மு.க. பெரும் சரிவை சந்திக்கும். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இருந்தபோது அ.தி.மு.க. எவ்வளவு பின்னடைவை சந்தித்தபோதும் அவர்களால் அக்கட்சியை மீட்டுக்கொண்டுவர முடியும். எடப்பாடி பழனிசாமி ஒன்றும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கிடையாது. அவர் ஒன்றும் ஆளுமை உள்ள தலைவர் கிடையாது. அ.தி.மு.க.வினர் எவரும் எடப்பாடி பழனிசாமியை நம்பவில்லை.

அ.தி.மு.க. சரிவை சந்தித்தப்பின் அக்கட்சியில் யாரும் இருக்கமாட்டார்கள். தேர்தலுக்குப்பின் அ.தி.மு.க.வில் மிகப்பெரிய மாற்றம் வரும். தேர்தலுக்குப்பின் அ.தி.மு.க. பெரும் பின்னடைவை சந்திக்கும். அ.தி.மு.க. இருந்தாலும் அக்கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி இருப்பாரா? என்பது சந்தேகம்தான்.

ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது மோடியா? லேடியா? என்று கேட்டாரே அப்படி கேட்கும் துணிச்சல் எடப்பாடி பழனிசாமிக்கு உள்ளதா?

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்