பா.ஜனதா ஆட்சி அகற்றப்படுவதற்கான அறிகுறி தென்படுகிறது - செல்வப்பெருந்தகை
மக்கள் விரோத அராஜக ஊழல் ஆட்சி நடத்துகிற பா.ஜனதா ஆட்சியின் நாட்கள் எண்ணப்பட்டு வருவதாக செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.;
சென்னை,
தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வுத்துறை, வருமான வரித்துறை, தேர்தல் ஆணையம் என அனைத்து தன்னாட்சி அமைப்புகளும் பா.ஜனதா அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகின்றன. தேர்தல் பத்திர நன்கொடை மூலமாக ரூ.6,986 கோடி, அதாவது மற்ற அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடையை விட 5 மடங்கு அதிகமாக பெற்ற பா.ஜனதா மீது தேர்தல் ஆணையம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மோடியால் நியமிக்கப்பட்ட தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கையும் இல்லை.
எனவே, வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா ஆட்சி அகற்றப்படுவதற்கான அறிகுறிகள் உத்தரபிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் நம்பிக்கையோடு தென்படுகின்றன. மக்கள் விரோத அராஜக ஊழல் ஆட்சி நடத்துகிற பா.ஜனதா ஆட்சியின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன.
இந்தியா கூட்டணி பிரசாரத்தின் மூலம் மோடியின் முகத்திரை கிழிக்கப்படும். அந்த வகையில், கண் தூங்காது, அயராது செயல்பட வேண்டுமென தமிழகத்திலுள்ள காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியினரை அன்போடு வேண்டுகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.