அன்று தினகரன் வீட்டுக் காவல் நாயாக இருந்தோம்... இன்று நாங்கள் சீறும் சிங்கங்கள் - ஆர்.பி.உதயகுமார் பேச்சு
அ.தி.மு.க. சார்பில் தேனி தொகுதியில் போட்டியிடும் நாராயணசாமியை ஆதரித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பிரசாரத்தில் ஈடுபட்டார்.;
மதுரை,
நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் தேனி தொகுதியில் போட்டியிடும் நாராயணசாமியை ஆதரித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது:-
"கடந்த 15 ஆண்டுகளாக தேனி பக்கமே எட்டிப் பார்க்காதவர் டி.டி.வி. தினகரன். ஜெயலலிதாவால் நடவடிக்கை எடுக்கப்பட்டு கட்சியில் இருந்து 10 ஆண்டுகள் ஒதுக்கிவைக்கப்பட்டவர் அவர். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழகத்தில் தலைகாட்ட ஆரம்பித்தார். ஆர்.கே.நகரில் 20 ரூபாய் நோட்டை காண்பித்து ஏமாற்றி, அதன்பிறகு அந்த தொகுதி பக்கமே போகாமல் இருந்தார். அந்த தொகுதியில் நிற்க முடியாமல், கோவில்பட்டியில் நின்றார்.
அங்கேயும் மக்கள் அவர் மீது நம்பிக்கை வைக்கவில்லை. அவரை புறக்கணித்து தோல்வி அடைய செய்தனர். கடைசி புகலிடமாக தேனி தொகுதிக்கு வந்துள்ளார். தேனி மக்களும் அவரை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. டி.டி.வி. தினகரன் வீராப்பாக சுற்றி வருகிறார். அவரின் வீராப்பு தேனி தொகுதியில் எடுபடாது.
என்னை பபூன் என்று கூறுகிறார். அவர் சொல்வதை நான் ஏற்றுக்கொள்கிறேன். நான் பபூன் தான். ஆனால், டி.டி.வி. தினகரன் பி.எஸ்.வீரப்பா மாதிரியான வில்லன். என்னால் எந்த தீமையும் ஏற்படாது. அவரால் என்னென்ன தீமை ஏற்படும் என்று தெரியும். இங்கு நாங்கள்தான் வெற்றி பெறுவோம். டி.டி.வி. தினகரன் பெரா வழக்கில் கைதாகி சிறை செல்வார்.
ஜெயலலிதா இருக்கும்வரை டி.டி.வி. தினகரனை பார்த்து பயந்தது உண்மைதான். அது சத்தியம்தான். ஆனால், இப்போது அவர் காட்டும் பூச்சாண்டிக்கெல்லாம் புழு கூட பயப்படாது. உங்களிடம் இருந்து விடுதலை பெற்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தொண்டர்கள் சுந்திர காற்றை சுவாசிக்கிறோம். ஜெயலலிதா இருக்கும்வரை டி.டி.வி. தினகரன் வீட்டுக் காவல் நாயாக இருந்தோம். எங்களை சீண்டி பார்க்க நினைத்தால், எச்சரிக்கிறோம். இப்போது சீறும் சிங்கங்களாக விஸ்வரூபம் எடுத்துள்ளோம்.
வாய்ச்சவடால் பேசும் உங்களை நம்ப மக்கள் தயாராக இல்லை. தேனியில் டி.டி.வி. தினகரன் மண்ணைக் கவ்வுவது உறுதி. எனவே, விரக்தியின் வெளிப்பாடாகதான் எங்களை கேலி செய்கிறார். டி.டி.வி. தினகரன் எங்கு போட்டியிட்டாலும் தோற்பது உறுதி."
இவ்வாறு அவர் கூறினார்.