ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு பணம் கொடுத்த விவகாரம்: அண்ணாமலை விளக்கம்

ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு பணம் கொடுத்த வீடியோ, கடந்த ஆண்டு 'என் மண் என் மக்கள்' யாத்திரையின்போது எடுக்கப்பட்டது என்று அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.;

Update:2024-03-29 21:06 IST

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் ஓட்டுப்பதிவுக்கு இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில் தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் களைகட்ட தொடங்கி உள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் ஏற்கெனவே தேர்தல் பிரசாரத்தை தொடங்கி தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், கோவையில் தேர்தல் பிரசாரத்தின்போது ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மறைத்து வைத்து பணம் கொடுப்பதுபோல் வீடியோ வெளியாகி வைரலானது. இந்த வீடியோவின் உண்மை நிலையை கண்டறிய கோவை மாவட்ட தேர்தல் அதிகாரி காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில் இந்த வீடியோ கடந்த ஆண்டு 'என் மண் என் மக்கள்' யாத்திரையின்போது எடுக்கப்பட்டது என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ஒரு காணொளியின் நம்பகத்தன்மையைச் சரிபார்க்கும் அத்தனை ஆதாரங்கள் இருந்தும், அதற்குப் பதிலாக, கோவை கலெக்டர் ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 29.07.2023 அன்று, எங்கள் 'என் மண் என் மக்கள்' யாத்திரையின் போது எடுக்கப்பட்ட ஒரு காணொளிக்கு, தற்போது நடவடிக்கை எடுக்க முயற்சிக்கிறார்.

அன்பு மற்றும் மரியாதையின் அடையாளமாக, ஆரத்தி எடுப்பவர்களுக்கு வெகுமதி அளிப்பது நமது தமிழகக் கலாச்சாரத்தில் உள்ளது. தேர்தல் நேரத்தில் மட்டும் இதனை நாங்கள் கடைப்பிடிப்பதில்லை.

பிறரைப் போல, பணத்தின் மூலம் கிடைக்கும் வாக்குகளில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதை நாங்கள் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளோம். இன்று இதுபோன்ற பொய்களைப் பரப்பும் கட்சிகள், உண்மையில் வாக்குகளுக்காக பணம் கொடுக்கும்போது நடவடிக்கை எடுக்க, கோவை கலெக்டர் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்."

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்