காங்கிரசின் நோக்கம் மிகவும் ஆபத்தானது - பிரதமர் மோடி தாக்கு
காங்கிரசின் நோக்கம் மிகவும் ஆபத்தானது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
போபால்,
நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் கடந்த 19ம் தேதியும், 88 தொகுதிகளுக்கு 2ம் கட்ட தேர்தல் கடந்த 26ம் தேதியும் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து 93 தொகுதிகளுக்கு இன்று 3ம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். 3ம் கட்ட தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில் வரும் 13, 20,25 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்த கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. ஜூன் 1ம் தேதி கடைசி கட்டமான 7ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இதனிடையே, மத்தியபிரதேசத்தில் மொத்தமுள்ள 29 தொகுதிகளுக்கும் 4 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே கடந்த 19ம் தேதி 6 தொகுதிகளுக்கும் 26ம் தேதி 6 தொகுதிகளுக்கும் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்ற நிறைவடைந்த நிலையில் இன்று 3ம் கட்டமாக 9 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து வரும் 13ம் தேதி எஞ்சியுள்ள 8 தொகுதிகளுக்கும் இறுதி கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில், மத்தியபிரதேசத்தில் இறுதி கட்ட தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் அம்மாநிலத்தின் கார்கொன் பகுதியில் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது,
மக்களின் முயற்சியால் நாடு முன்னேறி சென்றுகொண்டிருக்கிறது. உங்களின் வாக்கு நாட்டில் 25 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டுள்ளது. இந்தியா கூட்டணி பெரும்பான்மை மக்களின் தலைவிதியை பற்றி கவலைப்படவில்லை.
வரலாற்றின் முக்கியமான திருப்புமுனை பகுதியில் இந்தியா உள்ளது. ஜிகாத் வேலை செய்யுமா? அல்லது ராம ராஜியம் வேலை செய்யுமா? என்பதை நீங்கள் முடிவு செய்யுங்கள்
உங்கள் வாக்கு இந்தியாவை உலகின் 5வது மிகப்பெரிய பொருளாதாரமாக மாற்றியுள்ளது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டத்தை நீக்கியுள்ளது. பழங்குடியினப்பெண்ணை நாட்டின் ஜனாதிபதியாக்கியுள்ளது.
இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ளவர்கள் அவர்களின் குடும்ப அரசியலை காப்பாற்ற தேர்தலில் போட்டியிடுகின்றனர். காங்கிரசின் நோக்கம் மிகவும் ஆபத்தானதாக உள்ளது. அது எனக்கு எதிராக ஜிகாத் வாக்களிக்க அழைப்பு விடுக்கிறது. அவர்களின் நோக்கத்தை நான் வெளிக்கொண்டுவந்ததால் எனக்கு எதிரான தாக்குதல் பேச்சுகளை கட்டவிழ்த்து விட்டுள்ளனர்
இவ்வாறு அவர் கூறினார்.