ஜனாதிபதியை இன்று சந்திக்கிறது இந்திய தேர்தல் ஆணைய குழு

இந்திய தேர்தல் ஆணையம் வழங்கும் எம்.பி.க்கள் பட்டியலை அடிப்படையாக கொண்டு 18வது மக்களவை அமைப்பதற்கான நடவடிக்கையை ஜனாதிபதி தொடங்குவார்.;

Update:2024-06-06 11:43 IST

புதுடெல்லி,

நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 4ம் தேதி எண்ணப்பட்டன. மத்தியில் ஆட்சியமைக்க 272 தொகுதிகளை கைப்பற்றவேண்டிய நிலையில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது.

இதில் பா.ஜ.க. 240 தொகுதிகளை கைப்பற்றியது. கூட்டணியில் இடம்பெற்றிருந்த தெலுங்கு தேசம் 16 தொகுதிகளையும், ஐக்கிய ஜனதாதளம் 12 தொகுதிகளையும் கைப்பற்றின. இதனால் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி 3-வது முறையாக ஆட்சியமைக்க உள்ளது. மோடி 3-வது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளார். பதவியேற்பு விழா வருகிற 8-ம் தேதி மாலை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து, நேற்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் கூடியது. இதில் 17-வது மக்களவையை கலைக்க அமைச்சரவை பரிந்துரைத்தது. இதையடுத்து ஜனாதிபதி திரவுபதி முர்முவை அவரது இல்லத்தில் பிரதமர் மோடி சந்தித்தார். மக்களவையை கலைக்க அமைச்சரவை பரிந்துரைத்த தீர்மானத்தை அளித்தார். மேலும் தனது பதவி மற்றும் அமைச்சரவையின் ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் மோடி வழங்கினார். இதனை தொடர்ந்து, அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று 17வது மக்களவையை ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று கலைக்க உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்நிலையில், இன்று மாலை 4 மணியளவில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை இந்திய தேர்தல் ஆணைய குழு சந்திக்க உள்ளது. இந்த சந்திப்பின் போது புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்கள் பட்டியலையும் எந்தெந்த கட்சியில் எத்தனை எம்.பி.க்கள் என்பது குறித்த பட்டியலை வழங்க உள்ளனர். அரசியல் சாசன சட்டப்படி, தேர்தல் ஆணையம் ஜனாதிபதியை சந்தித்து புதிய எம்.பி.க்கள் பட்டியலையும் வழங்க வேண்டியது அவசியமாகும். தேர்தல் ஆணையம் வழங்கும் பட்டியலை அடிப்படையாக கொண்டு 18வது மக்களவை, புதிய ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி தொடங்குவார்.

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் ஆதரவு கடிதம் கொடுத்த நிலையில் ஜனாதிபதியை நாளை பிரதமர் மோடி சந்திக்க உள்ளார். ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்