அண்ணன் ஜெகன்மோகன் ரெட்டியிடம் கடன் வாங்கிய சர்மிளா... சொத்து மதிப்பு எவ்வளவு?

அண்ணனும், ஆந்திர முதல்-மந்திரியுமான ஜெகன்மோகன் ரெட்டியிடம் சர்மிளா கடன் வாங்கி இருப்பதாக வேட்புமனுவுடன் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

Update: 2024-04-23 05:52 GMT

அமராவதி,

ஆந்திர மாநிலத்தின் மறைந்த முன்னாள் முதல்-மந்திரி ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டி, ஆந்திர முதல்-மந்திரியாக உள்ளார். ராஜசேகர ரெட்டியின் மகளும், ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கையுமான ஒய்.எஸ்.சர்மிளா, தெலுங்கானாவில் தனிக்கட்சி நடத்தி வந்தார். சில மாதங்களுக்கு முன்பு காங்கிரசுடன் தனது கட்சியை இணைத்தார்.

இதனால் காங்கிரஸ் கட்சி சர்மிளாவை அம்மாநில காங்கிரஸ் தலைவராக நியமித்தது. மேலும் அவர் ஆந்திர மாநிலம் கடப்பா நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளராகவும் நிறுத்தப்பட்டுள்ளார்.

இதற்கிடையே, கடப்பா தொகுதிக்கான வேட்புமனுவை சர்மிளா தாக்கல் செய்தார். அதில் சொத்து மற்றும் கடன் விவரங்கள் அடங்கிய பிரமாண பத்திரத்தையும் அவர் தாக்கல் செய்தார்.

அதில், தன் பெயரில் ரூ.133 கோடி சொத்துகளும், தன் கணவர் அனில்குமார் பெயரில் ரூ.49 கோடி சொத்துகளுமாக மொத்தம் ரூ.182 கோடி மதிப்புள்ள சொத்துகள் இருப்பதாக சர்மிளா தெரிவித்துள்ளார்.

கடந்த 2023-2024 மதிப்பீட்டு ஆண்டில் தனக்கு ரூ.97 லட்சம் வருமானம் வந்ததாக தெரிவித்துள்ளார். தன் கணவர் தன்னிடம் ரூ.30 கோடி கடன் வாங்கி இருப்பதாகவும் கூறியுள்ளார்.

அதே சமயத்தில், தன்னுடைய அண்ணன் ஜெகன்மோகன் ரெட்டியிடம், தான் ரூ.82 கோடி கடன்பட்டிருப்பதாகவும், ஜெகன்மோகன் ரெட்டியின் மனைவி பாரதி ரெட்டியிடம் ரூ.19 லட்சத்து 56 ஆயிரம் கடன்பட்டிருப்பதாகவும் சர்மிளா பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சர்மிளா கூறியதாவது:-

சமூகத்தில், எந்த அண்ணனும் சொத்தில் தன் சகோதரிக்கு உரிய பங்கை அளிக்க வேண்டும். அது அவனது கடமை. சகோதரியின் உரிமை. ஆனால், சிலர் அந்த உரிய பங்கை சகோதரிக்கு கொடுத்துவிட்டு, அதை 'கடன்' என்று கணக்கு காட்டுகிறார்கள். இது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் தெரியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்