முஸ்லிம்களுக்கான காங்கிரஸ் பட்ஜெட் என்கிற பிரதமர் மோடியின் குற்றச்சாட்டு முட்டாள்தனமானது - சரத்பவார் கடும் தாக்கு

பிரதமர் மோடி ‘வாக்கு ஜிகாத்’ பற்றி பேசுகிறார். தற்போதைய அவரது பேச்சுகளில் ஒரு சதவீத உண்மை கூட இல்லை என்று சரத்பவார் தெரிவித்தார்.

Update: 2024-05-16 23:34 GMT

மும்பை,

மத்திய பட்ஜெட்டில் 15 சதவீத நிதியை சிறுபான்மையினருக்கு ஒதுக்க காங்கிரஸ் விரும்புவதாக பிரதமர் மோடி நேற்று முன்தினம் மராட்டிய மாநிலம் நாசிக்கில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசினார்.

பிரதமர் மோடியின் இந்த கருத்து குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தேசியவாத காங்கிரஸ்-சரத்சந்திர பவார் கட்சி தலைவர் சரத்பவார், "பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு என்பது நாட்டு மக்களுக்கானது. அது சாதி, மதத்தின் அடிப்படையில் ஒருபோதும் ஒதுக்கப்படவில்லை. முஸ்லிம்களுக்கு 15 சதவீத நிதி ஒதுக்கீடு செய்ய காங்கிரஸ் விரும்புவதாக கூறும் பிரதமர் மோடியின் குற்றச்சாட்டு முட்டாள்தனமானது.

பிரதமர் மோடி 'வாக்கு ஜிகாத்' பற்றி பேசுகிறார். தற்போதைய அவரது பேச்சுகளில் ஒரு சதவீத உண்மை கூட இல்லை. அவர் நம்பிக்கையை இழந்து விட்டார். குஜராத் மாநில முதல்-மந்திரியாக அவர் இருந்தபோது, விவசாய வளர்ச்சியில் ஆர்வம் காட்டினார். ஆனால் தற்போது அரசியல் பற்றி மட்டுமே பேசுகிறார். வெகுவிரைவில் சிறிய மாநில கட்சிகள் காங்கிரசுடன் இணையும் என்று நான் கூறிய கருத்தால் பிரதமர் மோடி ஏன் இவ்வளவு சிரமப்படுகிறார் என்று தெரியவில்லை.

சித்தாந்தங்கள் ஒன்றுபட்டு இருக்கும் வேளையில் கட்சிகள் இணைப்பு நடக்கும். இந்த விஷயத்தில் நான் உத்தவ் தாக்கரே கட்சியை பற்றி பேசவில்லை. அவரது கட்சி என்ன சிறிய கட்சியா?. கடந்த சட்டமன்ற தேர்தலில் அவர்கள் எங்களது கட்சியை விட அதிக இடங்களில் வெற்றி பெற்று இருந்தார்கள்.

மும்பை போன்ற நகரங்களில் வாகன பேரணி நடத்துவது நல்லதல்ல. பிரதமர் மோடி மும்பையில் குஜராத்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் வாகன பேரணி நடத்தி உள்ளார். அவர் குறிப்பிட்ட சமூகத்தினர் மீது கவனம் செலுத்துகிறார்" என்று அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்