வாக்குச்சாவடிக்குள் நுழைய எம்.எல்.ஏ.வுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை - காரணம் என்ன?
வாக்கு எண்ணிக்கையின்போது வாக்குச்சாவடிக்குள் நுழைய எம்.எல்.ஏ.வுக்கு சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தடை விதித்துள்ளது.
டெல்லி,
நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. நாடாளுமன்ற தேர்தலோடு சேர்த்து ஆந்திர சட்டசபைக்கும் கடந்த 13-ந்தேதி தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் அம்மாநிலத்தில் உள்ள பல்நாடு மாவட்டம் மச்சர்லா சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பலவாக்கேட் வாக்குச்சாவடியில் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ. ராமகிருஷ்ண ரெட்டி வாக்குப்பதிவு எந்திரங்களை அடித்து நொறுக்கிய காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
அதன்பின்னர் மாநில தேர்தல் அதிகாரி முகேஷ்குமார் மீனா தலைமை தேர்தல் கமிஷனுக்கு புகார் தெரிவித்தார். அதன்பேரில் எம்.எல்.ஏ.வை கைது செய்ய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. இதுதொடர்பாக எம்.எல்.ஏ.வை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக ராமகிருஷ்ண ரெட்டிக்கு கடந்த 28ம் தேதி ஆந்திர பிரதேச ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கியது.
இந்த ஜாமீனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய விடுமுறை கால அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ரெட்டிக்கு வழங்கப்பட்ட முன் ஜாமீன் நீதித்துறையின் கேலிக்கூத்து என்று கூறியது. மேலும் நாளை மச்சர்லா தொகுதியின் வாக்கு எண்ணும் நிலையத்திற்குள் நுழையவோ அல்லது அதன் அருகில் இருக்கவோ கூடாது என்று ரெட்டிக்கு தடை விதித்துள்ளது.
ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் சார்பில் மச்சர்லா சட்டமன்ற தொகுதியின் வேட்பாளரான ராமகிருஷ்ண ரெட்டி, தனது ஆதரவாளர்களுடன் வாக்குச்சாவடிக்குள் புகுந்து விவிபேட் மற்றும் வாக்குப்பதிவு எந்திரங்களை உடைத்தது ஆந்திர அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.