ஒவ்வொரு பூத் அளவிலும் வெற்றியை பதிவு செய்ய வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல்
பிரதமர் மோடி வாரணாசியில் பா.ஜ.க. தொண்டர்கள் கலந்து கொண்ட மாநாட்டில் பேசும்போது, வாக்காளர்கள் அதிக அளவில் வாக்கு பதிவு செய்ய வேண்டும் என்பதே முக்கியம் என்று பேசினார்.;
வாரணாசி,
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி, ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில், உத்தர பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடுகிறார்.
வருகிற ஜூன் 1-ந்தேதி, 7-வது மற்றும் கடைசி கட்ட தேர்தலின்போது இந்த தொகுதிக்கான வாக்கு பதிவானது நடைபெறுகிறது. இதில், வெற்றி பெற்று 3-வது முறையாக ஆட்சியமைக்கும் முனைப்பில் அவர் உள்ளார்.
இந்த தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை இன்று அவர் தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில், வாரணாசியில் பா.ஜ.க. தொண்டர்கள் கலந்து கொண்ட மாநாட்டில் பிரதமர் மோடி பேசும்போது, வாக்காளர்கள் அதிக அளவில் வாக்கு பதிவு செய்ய வேண்டும் என்பதே முக்கியம்.
இதனால், காசியில் நம்முடைய பிரநிதித்துவம் பிரதிபலிக்கும். எனவே, பூத் அளவிலான வெற்றியை நோக்கி நம்முடைய தீர்மானம் இருக்க வேண்டும். இதனை எப்படி சாதிப்பது? வாக்கு பதிவை ஜனநாயகத்தின் கொண்டாட்டம் ஆக உருமாற்ற வேண்டும்.
14 நாட்கள் மீதமுள்ளன. ஒவ்வொரு பூத்தும் திருவிழாவாக மாற வேண்டும். அனைத்து உள்ளூர் சமூகங்கள் மற்றும் அண்டை வீட்டுக்காரர்களை, ரங்கோலி மற்றும் பிற திருவிழா கொண்டாட்டங்களில் ஈடுபடுத்த வேண்டும். வாக்கு மையங்களில் இதற்கு முன் ஏற்படுத்தப்பட்ட சாதனைகளை விட கூடுதலான வாக்குகள் பதிவாவதற்கான பணிகளை செய்ய வேண்டும் என தொண்டர்களை வலியுறுத்தி உள்ளார்.