ராமநாதபுரம் தொகுதி ஏன்?.. ஓபிஎஸ் பதில்

அநீதிக்கு புறம்பாக யார் நடக்கிறார்களோ அவர்களுக்கு எதிராக நான் விஸ்வரூபம் எடுப்பேன் என்று ஓபிஎஸ் கூறியுள்ளார்.

Update: 2024-03-22 16:03 GMT

மதுரை,

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு பாஜக கூட்டணியில் இணைந்தார் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். அவர் பா.ஜ.க. வுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருந்தார். எனினும் பேச்சுவார்த்தையில் இழுபறி நிலவி வந்ததால் மற்ற கட்சிகள் அனைத்திற்கும் சீட் ஒதுக்கிய பா.ஜ.க., ஓபிஎஸ்ஸுக்கு எத்தனை சீட் என்பதை நேற்று இரவு வரை அறிவிக்கவில்லை.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் நேற்று ஓ.பி.எஸ். தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ்,

இரட்டை இலை சின்னத்தை பெறுவதை இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறோம். வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் மக்களவை தேர்தலும் வந்துவிட்டது. இதில் போட்டியிட்டு தொண்டர்களின் பலத்தை அறிவதற்கு 15க்கும் அதிகமான தொகுதிகள் கேட்டிருந்தோம். தொண்டர்கள் அனைவரும் இரட்டை இலை சின்னத்தில் தான் நிற்க வேண்டும் என்று விரும்பினர்.

சின்னத்தை பெறுவதில் காலதமாதம் ஏற்பட்டுள்ளது. அதனால் தொண்டர்களின் பலத்தை நிரூபிப்பதற்காக ஒரு தொகுதியில் போட்டியிடுவது என தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து முடிவெடுத்திருக்கிறோம். அதன்படி ராமநாதபுரம் தொகுதியில் நானே போட்டியிடுகிறேன். சுயேச்சை சின்னத்தில் தான் போட்டியிட இருக்கிறேன் என அறிவித்தார் ஓபிஎஸ்.

அதன்படி, முதல் முறையாக மக்களவை தேர்தலில் களமிறங்குகிறார் 3 முறை தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம். ராமநாதபுரம் தொகுதியில் ஓபிஎஸ் களமிறங்குவதால் அது விஐபி தொகுதி ஆகியுள்ளது. தி.மு.க. கூட்டணியில் முஸ்லீம் லீக் கட்சியின் நவாஸ் கனி, அ.தி.மு.க சார்பில் ஜெயபெருமாள் ஆகியோருடன் களத்தில் இருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். ஓபிஎஸ் சுயேட்சை சின்னத்தில் போட்டியிட உள்ளார்.

இந்நிலையில் இன்று மீண்டும் செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம். அப்போது பேசியுள்ள அவர், "ராமநாதபுரம் தொகுதி சேதுபதி மன்னரின் ஆளுகைக்கு உட்பட்டது. அங்கு வாழும் மக்கள் நீதியின்படி, தர்மத்தின் படி நீதி வழங்குவார்கள் என்பது கடந்த கால வரலாறு.

இன்றைக்கு அ.தி.மு.க. தொண்டர்களின் உரிமைகளை மீட்கும் தர்ம யுத்தத்தில் ஈடுபட்டுள்ள நான், நீதி கேட்டுத்தான் போட்டியிடுகிறேன். நீதியை வழங்கும் மக்கள் வாழும் மண் ராமநாதபுரம் என்ற வகையில் அங்கு போட்டியிடுகிறேன். அநீதிக்கும், நீதிக்குப் புறம்பாக யாரெல்லாம் செயல்படுகிறார்களோ அவர்களுக்கு எதிராகவும் விஸ்வரூபம் எடுப்பேன். சட்டப் போராட்டத்தில் நாங்கள் தான் வெற்றி பெறுவோம் எனத் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்