அமேதியின் காங்கிரஸ் வேட்பாளர் யார்? ராகுல் சொன்ன பதில்.. நீடிக்கும் சஸ்பென்ஸ்

காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் தகவல் வருவதாக ராகுல் காந்தி கூறினார்.

Update: 2024-04-17 11:59 GMT

புதுடெல்லி:

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அமேதி மற்றும் வயநாடு ஆகிய தொகுதிகளில் ராகுல் காந்தி போட்டியிட்டார். காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ராகுல் காந்தி, காங்கிரசின் கோட்டையான அமேதி தொகுதியில், பா.ஜ.க. வேட்பாளர் ஸ்மிருதி இரானியிடம் தோல்வி அடைந்தார். வயநாடு தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி. ஆனார். இந்த முறை வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுகிறார்.

அமேதி தொகுதியில் மே 20-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. பா.ஜ.க. வேட்பாளராக ஸ்மிருதி இரானி மீண்டும் போட்டியிடுகிறார். ஆனால் அவரை எதிர்த்து போட்டியிடக்கூடிய காங்கிரஸ் வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. காங்கிரஸ் வேட்பாளர் யார்? என்பதில் சஸ்பென்ஸ் நீடிக்கிறது.

இந்நிலையில், ராகுல் காந்தி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அமேதியில் பா.ஜ.க. வேட்பாளர் ஸ்மிருதி இரானிக்கு எதிராக காங்கிரஸ் கட்சி யாரை களமிறக்கும்? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு நேடியாக பதில் அளிக்காத ராகுல் காந்தி, 'நான் கட்சியின் சிப்பாய்' என்று கூறி சஸ்பென்ஸ் வைத்தார்.

"அமேதியில் போட்டியிடுவது தொடர்பான இந்த கேள்வி பா.ஜ.க.வின் கேள்வி. எனக்கு எந்த உத்தரவு வந்தாலும் அதை நான் ஏற்பேன். எங்கள் கட்சியில் வேட்பாளர்களை தேர்வு செய்யும் முடிவு காங்கிரஸ் தேர்தல் கமிட்டியால் எடுக்கப்படுகிறது. நான் கட்சியின் சிப்பாய். தேர்தல் கமிட்டி எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன்" என ராகுல் தெரிவித்தார்.

கட்சியின் வெற்றி வாய்ப்பு குறித்து ராகுல் கூறுகையில்,'பா.ஜ.க. 180 இடங்கள் வரை கைப்பற்றும் என கடந்த 15-20 நாட்களுக்கு முன்பு நினைத்தேன், ஆனால் இப்போதுள்ள சூழ்நிலையில் 150 இடங்களே பிடிக்கும் என நினைக்கிறேன். எங்கள் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் தகவல் வருகிறது' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்