'அமேதி தொகுதியைப் போல் வயநாட்டிலும் ராகுல் காந்தி தோல்வி அடைவார்' - பிரதமர் மோடி தாக்கு
அமேதி தொகுதியைப் போல் கேரளாவின் வயநாடு தொகுதியிலும் ராகுல் காந்தி தோல்வி அடைவார் என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.;
மும்பை,
மராட்டிய மாநிலம் நாண்டெட் தொகுதியில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது;-
"அமேதி தொகுதியில் தோல்வியடைந்த ராகுல் காந்தி, கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார். அங்கும் அவர் தோல்வி அடைவார். தேர்தலுக்குப் பிறகு அவர் வேறு பாதுகாப்பான இடத்தை தேடிக் கொள்ள வேண்டும். 'இந்தியா' கூட்டணி தலைவர்கள் சிலர் தேர்தலில் போட்டியிடுவதற்கு தைரியம் இல்லாமல் மக்களவையில் இருந்து மாநிலங்களவைக்குச் சென்றுவிட்டனர்.
காங்கிரஸ் கட்சியின் மோசமான ஆட்சியை சரிசெய்வதற்காக கடந்த 10 ஆண்டுகளை செலவிட்டிருக்கிறேன். நிறைய பணிகளை செய்ய வேண்டியிருக்கிறது. காங்கிரஸ் கட்சி ஏழைகள் மற்றும் விவசாயிகளின் வளர்ச்சிக்கு தடையாக இருந்தது. விவசாய நெருக்கடி இப்போது உருவான பிரச்சினை அல்ல. அது காங்கிரஸ் கட்சியின் தவறான கொள்கைகளால் உருவானது.
காங்கிரஸ் தலைவர்கள் தேர்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக்கொண்டு விட்டனர். சுயநலவாதிகள் தங்கள் ஊழல்களை மறைப்பதற்காக ஒன்றிணைந்து எதிர்கட்சி கூட்டணியை உருவாக்கியுள்ளனர். தேர்தலுக்கு பிறகு அவர்கள் ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டுக் கொள்வார்கள்."
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.