ஜனநாயகம் பற்றி பேச ராகுல் காந்திக்கு உரிமை இல்லை - அமித்ஷா பதிலடி
ராகுல் காந்திக்கு ஜனநாயகம் பற்றி பேச உரிமை இல்லை என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்.
ஜோத்பூர்,
நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுக்கு எதிராக அமைக்கப்பட்டுள்ள இந்தியா கூட்டணி கட்சிகளின் சார்பில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் 'ஜனநாயகத்தைக் காப்பாற்றுவோம்' என்ற தலைப்பில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பைக் காப்பாற்ற பா.ஜ.க.வை தோற்கடிக்க வேண்டும் என்று இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் மக்களுக்கு அறிவுறுத்தினர்.
மத்திய அரசின் 'சர்வாதிகார' நடவடிக்கைகளால் நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் சமநிலையை இழந்துவிட்டதாக அவர்கள் குற்றம் சாட்டினர். மேலும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி மேட்ச் பிக்சிங் செய்ய முயற்சிப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். இந்த முயற்சியின் மூலம் பா.ஜ.க. தேர்தலில் வெற்றி பெற்று, அரசியல் சட்டத்தை மாற்றினால், நாடு முடிந்துவிடும் என்றும் அவர் கூறினார்.
இந்த நிலையில் ஜோத்பூரில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்ட மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இந்தியா கூட்டணிக்கு பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது:-
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு ஜனநாயகம் பற்றி பேச உரிமை இல்லை. அவரது பாட்டியும், முன்னாள் பிரதமருமான இந்திரா காந்தி, எமர்ஜென்சி காலக்கட்டத்தில் லட்சக்கணக்கான மக்களை சிறையில் அடைத்தார். அரசியல் கட்சிகளுக்கு தடை விதித்தார்.
நீங்கள் எத்தனை கட்சிகளைத் திரட்டினாலும் மோடி மீண்டும் பிரதமராக வருவார். ஊழல் செய்பவர்கள் சிறைக்கு செல்வார்கள். நரேந்திர மோடியை மூன்றாவது முறையாக பிரதமராக்க நாட்டு மக்கள் தயாராக உள்ளனர். பா.ஜ.க.வின் அடுத்த ஆட்சிக் காலத்தில் இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறும்.
இவ்வாறு அவர் கூறினார்.