தொண்டர்கள் ரகளை: நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டு வெளியேறிய ராகுல், அகிலேஷ்

தொண்டர்கள் கூட்டம் ஒரே நேரத்தில் மேடையில் ஏறியதால் அதுவும் சரிந்து சிலருக்கு காயம் ஏற்பட்டது.;

Update:2024-05-20 01:18 IST

பிரயாக்ராஜ்,

உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியும், சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவும் நேற்று பல இடங்களில் கூட்டாக பிரசாரம் செய்தனர்.அங்குள்ள புல்புர் தொகுதிக்கு உட்பட்ட படிலா பகுதியில் இருவரும் பங்கேற்கும் பிரசார கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இதற்காக ஹெலிகாப்டர் மூலம் அந்த இடத்துக்கு சென்று மேடையேறினர். இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக இரு கட்சிகளையும் சேர்ந்த தொண்டர்கள் கட்டுக்கடங்காத வகையில் திரண்டிருந்தனர். திடீரென அவர்கள் மேடையை நோக்கி அலையலையாக வரத்தொடங்கினர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் அவர்களையும் தள்ளிவிட்டு மேடையை நோக்கி முன்னேறினர். இதனால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் நிலை உருவானது.

எனவே கூட்டத்தினரை பார்த்து அமைதியாக இருக்குமாறு, இரு தலைவர்களும் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் ரகளையில் ஈடுபட்ட தொண்டர்கள் அதை காதில் வாங்கவில்லை. உடனே நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டு அகிலேஷ் யாதவ் கோபமாக மேடையை விட்டு கீழே இறங்கி பின்புறம் இருந்த ஹெலிபேடை நோக்கி வேகமாக நடந்தார். அவருடன் ராகுல் காந்தியும் மேடையை வி்டு இறங்கினார்.

பின்னர் இருவரும் அந்த ஹெலிகாப்டரில் ஏறி அங்கிருந்து சென்று விட்டனர். அதேநேரம் முன்னோக்கி வந்த தொண்டர்கள் கூட்டம் ஒரே நேரத்தில் மேடையில் ஏறியதால் அதுவும் சரிந்து சிலருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக பா.ஜனதாவை சமாஜ்வாடி தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்