முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச வாகன வசதி -தலைமை தேர்தல் அதிகாரி

தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு காலை 7 மணி முதல் 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார்.

Update: 2024-04-18 07:25 GMT

சென்னை,

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி, ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. வாக்குகள் ஜூன் 4-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டத்தில் நடைபெற உள்ளது.

இதனை தொடர்ந்து, அரசியல் கட்சிகள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டன. நேற்று மாலையுடன் கட்சிகளின் பிரசாரம் நிறைவடைந்தது. வாக்களிப்பதற்கு இன்னும் 24 மணிநேரம் கூட இல்லாத சூழலில், தேர்தல் களம் பரபரப்படைந்து உள்ளது. கடும் வெயிலிலும் மக்கள் தங்களுடைய ஜனநாயக கடமையை நிறைவேற்ற தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தில் நடைபெறவுள்ள மக்களவை தேர்தல் ஏற்பாடுகள் பற்றி சென்னை தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இன்று மதியம் விளக்கம் அளித்துள்ளார். அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, தமிழகத்தில் மொத்தம் 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.

தமிழக தேர்தல் களத்தில் மொத்தம் 950 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். அவர்களில் 874 பேர் ஆண் வேட்பாளர்கள். 76 பேர் பெண் வேட்பாளர்கள் ஆவர். 39 பொது பார்வையாளர்கள், 58 செலவின பார்வையாளர்கள் பணியில் உள்ளனர். இந்த தேர்தலில், 8,050 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்தவை என அடையாளம் காணப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

தேர்தலை முன்னிட்டு, 68,321 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. 3.3 லட்சம் பேர் தேர்தல் பணியில் ஈடுபடுவார்கள். 1.3 லட்சம் மாநில போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதற்காக, 190 கம்பெனி துணை ராணுவ படையினர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர்.

44,801 வாக்கு பதிவு மையங்களில் வெப் கேமிரா நிறுவப்பட்டு உள்ளன. மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதியாக, வாக்குச்சாவடிகளில் சாய்வுதளம், சக்கர நாற்காலி வசதி செய்யப்பட்டு உள்ளது.

இதுவரை ரூ.173.85 கோடிக்கு ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. ரூ.1,083 கோடி மதிப்பிலான நகை மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. சி-விஜில் செயலி மூலம் இதுவரை 4,861 புகார்கள் பெறப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் 1.58 லட்சம் மின்னணு இயந்திரங்கள் வாக்கு பதிவுக்கு பயன்படுத்தப்படும்.

காலை 7 மணி முதல் 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். மாலை 6 மணிக்கு மேல் வாக்களிக்க ஏதுவாக, டோக்கன் வழங்கி வாக்குப்பதிவு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என்று தெரிவித்து உள்ளார். வாக்காளர் அடையாள அட்டை இல்லையென்றாலும் வாக்காளர்கள் தங்களுடைய ஆதார் கார்டு, பான் கார்டு உள்ளிட்ட 12 ஆவணங்களில் ஒன்றை கொண்டு சென்று வாக்களிக்கலாம். மாற்றுத்திறனாளிகள், முதியோர், கர்ப்பிணிகள் வாக்களிக்க ஏதுவாக வசதிகள் செய்யப்பட்டுள்ளது. 1950- என்ற எண்ணுக்கு அழைத்தால் வாக்களிக்க இலவசமாக வாகனம் அனுப்பி வைக்கப்படும்" இவ்வாறு  தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்