தபால் வாக்குகளை முதலில் எண்ண வேண்டும் என சட்ட விதி உள்ளது - 'இந்தியா' கூட்டணி
தபால் வாக்குகளை முதலில் எண்ணி முடிவுகளை அறிவிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் 'இந்தியா' கூட்டணி நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.;
புதுடெல்லி,
நாடாளுமன்ற மக்களவை தேர்தலின் 7-வது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு நேற்று நடந்து முடிந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 4-ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்நிலையில் 'இந்தியா' கூட்டணி நிர்வாகிகள் இன்று டெல்லியில் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்து மனு ஒன்றை அளித்துள்ளனர். அதில், வாக்கு எண்ணிக்கையின்போது தபால் வாக்குகளை முதலில் எண்ணி அதன் முடிவுகளை அறிவிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தபால் வாக்குகளை எண்ணி முடித்த பிறகே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ண வேண்டும் என்றும், வாக்கு எண்ணிக்கையின்போது முறைகேடுகள் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்வதோடு, வாக்கு எண்ணிக்கையை நேர்மையாகவும், முறையாகவும் நடத்த வேண்டும் எனவும் 'இந்தியா' கூட்டணி நிர்வாகிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், வழக்கறிஞருமான அபிஷேக் சிங்வி செய்தியாளர்களிடம் கூறுகையில், "தபால் வாக்குகளை முதலில் எண்ணி முடிவுகளை அறிவிக்க வேண்டும் என சட்ட விதி 54-ஏ தெளிவாக கூறுகிறது. இதை 2019-ல் தேர்தல் ஆணையமே எழுத்துப்பூர்வமாக முன்னிலைப்படுத்தி கூறியுள்ளது.
ஆனால் அதன் பிறகு இந்த சட்ட விதி பின்பற்றப்படாமல், தேர்தல் ஆணையத்தால் திரும்ப பெறப்பட்டது. இதன் மூலம் தபால் வாக்குகளை எண்ணுவதற்கு முன்பாகவே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணி, முடிவுகளையும் அறிவிக்க முடியும் என அர்த்தமாகிறது. ஒரு வழிகாட்டுதல் அல்லது கடிதம் மூலம் ஒரு சட்ட விதியை மாற்றிவிட முடியாது" என்று தெரிவித்தார்.