அனைத்து தேர்தல் பணியாளர்களுக்கும் தபால் ஓட்டு - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை

நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 19-ந்தேதி காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

Update: 2024-04-16 17:19 GMT

சென்னை,

சென்னை தலைமைச் செயலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம் இன்று அளித்த புகார் மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நாடாளுமன்ற பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் 19-ந் தேதி நடைபெறுகிறது. இத்தேர்தல் பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் தபால் வாக்குகளை அளிப்பதில் புதிய முறை வகுக்கப்பட்டு உள்ளது. அவர்கள்16-ந் தேதி மாலை 5 மணிவரை மட்டுமே தபால் வாக்குகளை அந்தந்த பயிற்சி மையங்களில் செலுத்த முடியும் என்று தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. அதற்கு பிறகு தபால் வாக்குகளைப் பெறவும், செலுத்தவும் வாய்ப்பு இல்லை என்று தெரிகிறது. இதை 18-ந் தேதிவரை நீட்டிக்க வேண்டும்.

ஏற்கனவே தேர்தல் பணிகளில் ஈடுபடும் அலுவலர்களுக்கு தபால் வாக்குகளை வழங்குவதில் குளறுபடிகள் நடந்ததாகவும், படிவம் கிடைக்கவில்லை என்றும் ஆங்காங்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதனால் தேர்தல் பணிகளில் ஈடுபடும் பெரும்பாலான அலுவலர்கள், தங்கள் வாக்குகளை செலுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தேர்தல் கமிஷனின் இந்த நடவடிக்கை, தேர்தல் பணியில் உள்ள அலுவலர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே தேர்தல் பணியாளர்கள், கடந்த தேர்தல்களைப் போல வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளன்று (ஜூன் 4-ந் தேதி) தங்களது வாக்குகளை செலுத்தும் நடைமுறையை பின்பற்றி அவர்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்