பரபரக்கும் தேர்தல் களம்: இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் அரசியல் தலைவர்கள்

பிரசாரம் முடிய இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், இறுதிக்கட்ட பிரசாரத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.;

Update:2024-04-15 05:29 IST

சென்னை,

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் 19-ந் தேதி நடைபெறும் நிலையில், தேர்தல் பிரசாரம் 17-ந் தேதியுடன் முடிவடைகிறது. நெல்லையில் இன்று பிரதமர் மோடியும், சென்னையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் - அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர்.

இறுதிக்கட்ட பிரசாரத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் ஈடுபட்டுள்ளதால் அரசியல் களம் பரபரப்பாகி உள்ளது.

நெல்லையில் இன்று பிரதமர் மோடி

அதன்படி இன்று (திங்கட்கிழமை) 8-வது முறையாக தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி, நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே அகஸ்தியர்பட்டியில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேச இருக்கிறார்.

திருவனந்தபுரத்தில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் பங்கேற்று விட்டு ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மாலை 4.10 மணிக்கு அம்பை அகஸ்தியர்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடு தளத்துக்கு வருகிறார்.

பின்னர் அங்கிருந்து குண்டு துளைக்காத கார் மூலம் 4.15 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதியை வந்தடைகிறார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து 4.20 மணிக்கு பொதுக்கூட்ட மேடைக்கு மோடி வருகிறார். 5.20 மணி வரை பொதுக்கூட்டம் நடக்கிறது.

நெல்லை தொகுதி பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரன், கன்னியாகுமரி தொகுதி பா.ஜனதா வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி தொகுதி த.மா.கா. வேட்பாளர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன், தென்காசி (தனி) தொகுதி கூட்டணி வேட்பாளரான தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான் பாண்டியன் ஆகியோருக்கு அவர் ஆதரவு திரட்டுகிறார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

இதேபோல் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று (திங்கட்கிழமை) புதுச்சேரி, கடலூர், விழுப்பும் நாடாளுமன்ற தொகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். இதற்காக புதுச்சேரிக்கு இன்று காலை 11 மணிக்கு வரும் மல்லிகார்ஜுன கார்கேவை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வரவேற்க உள்ளார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

இதேபோல், தமிழகம் முழுவதும் பிரசாரத்தை முடித்துகொண்டு தலைநகர் சென்னைக்கு திரும்பியுள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவள்ளூர் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், வடசென்னை தி.மு.க. வேட்பாளர் டாக்டர் கலாநிதி வீராசாமி ஆகியோருக்கு ஆதரவு திரட்டுகிறார்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

இதேபோல், அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியும் இன்று மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் பார்த்தசாரதி, தென்சென்னை தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் ஜெயவர்தன் ஆகியோருக்கு வாக்கு சேகரிக்கிறார்.

மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங்

இதேபோல் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங், நாளை (செவ்வாய்க்கிழமை) சென்னை தாம்பரம், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டம் மற்றும் வாகன பேரணியில் பங்கேற்று பா.ஜனதா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

நாளை காலை 10.30 மணிக்கு கிருஷ்ணகிரி புதிய பஸ்நிலையம் அண்ணா சிலை அருகே நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ராஜ்நாத்சிங் பங்கேற்று கிருஷ்ணகிரி பா.ஜனதா வேட்பாளர் நரசிம்மனை ஆதரித்து நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

பொதுக்கூட்டம் முடிந்ததும் ஹெலிகாப்டர் மூலம் சென்னை வருகிறார். மதியம் 1.20 மணிக்கு சென்னை கிண்டியில் உள்ள லீ மெரிடியன் ஓட்டலில் சமுதாய தலைவர்களை சந்தித்து பேசுகிறார்.

இதன்பின்பு, ஹெலிகாப்டர் மூலம் திருவண்ணாமலை செல்கிறார். மாலை 4.20 மணிக்கு திருவண்ணாமலை தொகுதி பா.ஜனதா வேட்பாளர் அஸ்வத்தாமனை ஆதரித்து நடைபெறும் வாகன பேரணி நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

இந்த நிகழ்ச்சி முடிந்ததும் மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் சென்னை வருகிறார். தாம்பரம் மார்க்கெட் சாலையில் இரவு 7 மணிக்கு நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று ஸ்ரீபெரும்புதூர் த.மா.கா. வேட்பாளர் வேணுகோபாலுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

வி.கே.சிங்

இதேபோல் மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் விமான போக்குவரத்துத்துறை இணை மந்திரி வி.கே.சிங், பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து சென்னையில் இன்று (திங்கட்கிழமை) பிரசாரம் செய்கிறார்.

காலை 9 மணி முதல் 11 மணி வரை தென்சென்னை பா.ஜனதா வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு ஆதரவு திரட்டுகிறார். மாலை 4 மணிக்கு வடசென்னை திரு.வி.க.நகரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில்பங்கேற்று வடசென்னை பா.ஜனதா வேட்பாளர் பால்கனகராஜுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

மாலை 6.30 மணிக்கு ஆவடியில், திருவள்ளூர் பா.ஜனதா வேட்பாளர் பொன்.பாலகணபதியை ஆதரித்து நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.

நாளை மறுநாள் பிரசாரம் ஓய்கிறது

நாளை (செவ்வாய்கிழமை) முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், காஞ்சீபுரம், ஸ்ரீபெரும்புதூர் தொகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார். வரும் 17-ந் தேதி மாலை 5 மணியுடன் தமிழகத்தில் பிரசாரம் ஓய்கிறது. தேர்தல் நாளான 19-ந் தேதி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்க இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்