தொகுதி வாரியாக வாக்குப்பதிவு விவரம் வெளியீடு; தேர்தல் ஆணையம் அதிரடி

தொகுதி வாரியாக வாக்குப்பதிவு விவரத்தை வெளியிட்டு தேர்தல் ஆணையம் அதிரடி காட்டியுள்ளது.;

Update:2024-05-25 21:36 IST

டெல்லி,

நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி, 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் கடந்த மாதம் 19ம் தேதியும், 88 தொகுதிகளுக்கு 2ம் கட்ட தேர்தல் கடந்த மாதம் 26ம் தேதியும், 93 தொகுதிகளுக்கு கடந்த 7ம் தேதி 3ம் கட்ட தேர்தலும், 96 தொகுதிகளுக்கு கடந்த 13ம் தேதி 4ம் கட்ட தேர்தலும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து 49 தொகுதிகளுக்கு கடந்த 20ம் தேதி 5ம் கட்ட தேர்தல் நடைபெற்றது.

இதையடுத்து, 58 தொகுதிகளுக்கு இன்று 6ம் கட்ட தேர்தல் நடைபெற்றது. இறுதிகட்டமான 7ம் கட்ட தேர்தல் வரும் 1ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளன.

இதனிடையே, நடப்பு நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்கு சதவிகிதம் குறித்த தகவல்களை தேர்தல் ஆணையம் வெளியிடுவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. அதேபோல், காலதாமதமாக வெளியிடப்படும் தகவல்களிலும் மாற்றங்கள் செய்யப்பட்டு புதிய வாக்கு சதவிகிதமாக அறிவிக்கப்படுகின்றன. தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையில் சந்தேகம் எழுந்துள்ளதாகவும், வாக்குப்பதிவு சதவிகிதத்தை தேர்தல் ஆணையம் உடனடியாக வெளியிட வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.

ஒவ்வொரு கட்ட தேர்தல் முடிவிலும் ஒவ்வொரு தொகுதிகளிலும் பதிவான வாக்கு விவரத்தை 48 ஆணையத்தில் தேர்தல் ஆணையம் அதன் இணையதளத்தில் வெளியிட உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நேற்று விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் தொகுதி வாரியாக விவரத்தை வெளியிட தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது எனவும், தேர்தல் முடிந்த பின்னர் இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெறும் என கூறி வழக்கை ஒத்தி வைத்தது.

இந்நிலையில், வாக்குப்பதிவு விவரம் தொடர்பான விமர்சனங்கள் எழுந்த நிலையில் 5 கட்ட தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை விவரத்தை தலைமை தேர்தல் ஆணையம் இன்று அதிரடியாக வெளியிட்டுள்ளது.

5 கட்ட தேர்தலில் தொகுதி வாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை மற்றும் அந்த தொகுதிகளில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை, வாக்கு சதவிகிதம் ஆகிய விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 96.88 கோடி பேர் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதில் 5 கட்ட தேர்தலில் 76.41 கோடி பேர் தகுதியுடைய வாக்காளர்கள் எனவும் அதில் 50.72 கோடி பேர் வாக்களித்துள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை தொடர்பான விவரங்களை யாராலும் மாற்றியமைக்க முடியாது என தெரிவித்துள்ளது.

மேலும், தேர்தல் நடைமுறையை கெடுக்கும் வகையில் தவறான மற்றும் சித்தரிக்கப்பட்ட முயற்சிகள் நடைபெறுவதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்