எங்களை ஊழல் கட்சி என்று கூறுவதா..? - பிரதமர் மோடி மீது மம்தா கடும் தாக்கு
எங்களை ஊழல் கட்சி என்று குற்றம் சாட்டும் பிரதமர் மோடி, முதலில் கண்ணாடி முன் நின்று தன்னை பார்த்துக்கொள்ள வேண்டும் என்று மம்தா பானர்ஜி கூறினார்.;
கொல்கத்தா,
மேற்குவங்காள மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ள மொயினகுரியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய கட்சி தலைவரும், மேற்குவங்காள முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி, "ஊழல் புகார்களை விசாரிப்பதற்காக, மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு, 300 மத்திய குழுக்களை மேற்கு வங்காளத்துக்கு அனுப்பி வைத்தது. ஆனால் அவர்கள் எதையும் கண்டுபிடிக்கவில்லை. மேற்குவங்காளத்தில் நடத்தப்பட்ட விசாரணைகள் குறித்த வெள்ளை அறிக்கையை மத்திய அரசு வெளியிட வேண்டும்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை ஊழல் கட்சி என்று கூறும் பிரதமர் மோடி, முதலில் கண்ணாடி முன்பு நின்று தன்னை பார்த்துக்கொள்ள வேண்டும். அவரது கட்சியினர் எப்படிப்பட்டவர்கள் என்பதையும் பார்க்க வேண்டும்.
ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் மேற்கு வங்காள மாநிலத்துக்கு வரவேண்டிய நிதி என்ன ஆனது. மாநில மக்களுக்கு பிரதமர் பதில் சொல்ல வேண்டும். பா.ஜனதா, மேற்குவங்காளத்துக்கு எதிரான கட்சி. தேசிய குடிமக்கள் பதிவு சட்டத்தை மேற்குவங்காளத்தில் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.
மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மட்டுமே பா.ஜனதாவுக்கு எதிராக போராடுகிறது, ஆனால் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் பா.ஜனதாவுடன் இணைந்து செயல்படுகின்றன. நாங்கள் தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் இருக்கிறோம், ஆனால் மேற்கு வங்காளத்தில் மாநில நலனுக்காக தனித்தே நிற்கிறோம்" என்று அவர் கூறினார்.