பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்திற்காக 14-ந்தேதி மைசூரு, மங்களூருவுக்கு பயணம்

கர்நாடகாவில் காங்கிரஸ் தேசிய தலைவர் கார்கேவின் சொந்த ஊரான கலபுரகியில் இருந்து பிரதமர் மோடியின் பிரசாரம் கடந்த மாதம் தொடங்கியது.

Update: 2024-04-11 14:23 GMT

மைசூரு,

கர்நாடகாவில் தேர்தல் பிரசாரத்திற்காக பிரதமர் மோடி வருகிற 14-ந்தேதி மைசூரு மற்றும் மங்களூரு நகரங்களுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். இதன்படி, அவர் மைசூரு நகரில் ஒரு மெகா பேரணியில் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மங்களூருவில் வாகன பேரணியை நடத்தவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

இதனை பா.ஜ.க. பொது செயலாளர் வி. சுனில் குமார் கூறியுள்ளார். இதன்படி, பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியான மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவர்களும் கூட்டத்தில் கலந்து கொள்வார்கள். இந்த கூட்டத்தில் மைசூரு, சாம்ராஜ்நகர், மாண்டியா மற்றும் ஹசன் மக்களவை தொகுதிகளை சேர்ந்த தொண்டர்களும் பங்கேற்பார்கள்.

அவர் மங்களூருவில், மாலை 6 மணியளவில் 1.5 கி.மீ. தொலைவுக்கு நாராயணகுரு பகுதியில் இருந்து நவபாரத் பகுதி வரை வாகன பேரணியை நடத்த உள்ளார். இதேபோன்று, அடுத்த நாள் (15-ந்தேதி) மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கரும் பெங்களூருவில் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.

கடந்த மாதம் கலபுரகி மற்றும் சிவமொக்கா மாவட்டங்களில் பிரதமர் மோடி மெகா பேரணியை நடத்தினார். இதன்படி, பிரதமர் மோடியின் பிரசாரம் முதன்முதலாக காங்கிரஸ் தேசிய தலைவர் கார்கேவின் சொந்த ஊரான கலபுரகியில் இருந்து தொடங்கியது. இந்நிலையில், மீண்டும் கர்நாடகாவில் அவர் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்