சீன ராணுவம் ஊடுருவியபோது பிரதமர் மோடி தூங்கிக்கொண்டிருந்தார் - மல்லிகார்ஜுன கார்கே தாக்கு
மக்களை சித்ரவதை செய்து, தன்னுடன் வைத்துக்கொள்ள பிரதமர் மோடி விரும்புவதாக மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.;
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கார் என்ற இடத்தில் நேற்று காங்கிரஸ் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. அதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்துகொண்டார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
பிரதமர் மோடி நாட்டை பற்றி சிந்திப்பதே இல்லை. சோனியாகாந்தி குடும்பத்தை வசைபாடுவதில்தான் கவனமாக இருக்கிறார். கடந்த 1989-ம் ஆண்டில் இருந்து சோனியாகாந்தி குடும்பத்தை சேர்ந்த யாரும் பிரதமராகவோ, மந்திரியாகவோ இருந்தது இல்லை. இருப்பினும், வாரிசு அரசியல் என்று பேசுகிறார்.
மக்களை சித்ரவதை செய்து, தன்னுடன் வைத்துக்கொள்ள பிரதமர் மோடி விரும்புகிறார். அவர் எப்போதும் பொய் பேசுகிறார். அவரை 'பொய்களின் தலைவர்' என்று சொல்லலாம்.
பிரதமர் மோடி, மற்ற நாட்களில் உலகம் முழுவதும் சுற்றுகிறார். தேர்தல் நேரத்தில் மட்டும் நாடு முழுவதும் செல்கிறார். ஆனால் கலவரம் நடந்த மணிப்பூருக்கு மட்டும் செல்வது இல்லை.
மோடி தன்னை '56 அங்குல மார்பு கொண்டவன். பயப்பட மாட்டேன்' என்று சொல்கிறார். நீங்கள் பயப்படாவிட்டால், சீனாவுக்கு பெரும் நிலப்பரப்பை விட்டுக்கொடுத்தது ஏன்? சீன ராணுவம் ஊடுருவியபோது, மோடி தூங்கிக்கொண்டிருந்தார். அவர் தூக்க மாத்திரை போட்டிருந்தாரா? இவ்வாறு அவர் பேசினார்