பிரதமர் மோடிக்கு ஊழலை பற்றி பேச எந்த அருகதையும் இல்லை- செல்வப்பெருந்தகை

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தை அரசியல் காரணங்களுக்காக எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதற்கு பா.ஜ.க. பயன்படுத்தி வருகிறது என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார் .

Update: 2024-04-02 09:55 GMT

சென்னை,

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக பா.ஜ.க. அரசு எப்போதும் செயல்பட்டதில்லை என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.கடந்த 9 ஆண்டுகளில் மோடியின் நெருங்கிய நண்பரான அதானியின் சொத்து 2229 சதவிகிதமும், அம்பானியின் சொத்து 400 சதவிகிதமும் அதிகரித்து இருக்கிறது. உலக கோடீஸ்வரர்கள் வரிசையில் 2014 ஆம் ஆண்டு 609வது இடத்தில் இருந்த அதானி, இன்றைக்கு 13-வது இடத்தில் உயர்வதற்கு யார் காரணம்? யார் பொறுப்பு? மோடி ஆட்சியால் கார்ப்பரேட்டுகள் பயனடைந்தார்கள். அதனால் தேர்தல் பத்திர நன்கொடை ஊழல் மூலம் ரூபாய் 6572 கோடி குவித்த பிரதமர் மோடி ஊழலைப் பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் இல்லை.போதை பொருள் தடுப்புக்காக கொண்டு வரப்பட்ட சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தை அரசியல் காரணங்களுக்காக எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதற்கு பா.ஜ.க. பயன்படுத்தி வருகிறது.

இத்தகைய பாசிச, சர்வாதிகார ஆட்சி நடத்தி வருகிற பிரதமர் மோடிக்கு வருகிற மக்களவை தேர்தலில் மக்கள் உரிய தீர்ப்பை வழங்கி ஜனநாயகத்தை காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கை இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்