'பா.ஜனதாவை 140 இடங்களுக்காக மக்கள் ஏங்க வைப்பார்கள்' - அகிலேஷ் யாதவ் விமர்சனம்
மக்களவை தேர்தலில் பா.ஜனதாவை 140 இடங்களுக்காக மக்கள் ஏங்க வைப்பார்கள் என அகிலேஷ் யாதவ் விமர்சித்துள்ளார்.;
புதுடெல்லி,
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இன்றைய தினம் 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளுக்கு 5-ம் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது.
மொத்தம் 80 இடங்களைக் கொண்ட உத்தர பிரதேச மாநிலத்தில், 'இந்தியா' கூட்டணியில் அங்கம் வகிக்கும் சமாஜ்வாடி மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து மக்களவை தேர்தலை சந்திக்கின்றன. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கேரளாவின் வயநாடு தொகுதியிலும், உத்தர பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியிலும் போட்டியிடுகிறார்.
இதில் ரேபரேலி தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்ற நிலையில், அந்த தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் ராகுல் காந்தி நேரில் சென்று பார்வையிட்டார். இந்த நிலையில், மக்களவை தேர்தலில் பா.ஜனதாவை 140 இடங்களுக்காக மக்கள் ஏங்க வைப்பார்கள் என சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் விமர்சித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-
"கடந்த 10 ஆண்டுகளாக விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் தொழிலதிபர்களிடையே மத்திய அரசு பாகுபாடு காட்டி வந்துள்ளது. தற்போது நடைபெறுவது அரசியலமைப்பை காப்பதற்கான தேர்தல். இந்த தேர்தலில் பா.ஜனதாவை 140 இடங்களுக்காக மக்கள் ஏங்க வைப்பார்கள்."
இவ்வாறு அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.