தேர்தலை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு படையெடுத்த மக்கள் - தாம்பரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்
சென்னையில் வசிக்கும் வெளியூர்களைச் சேர்ந்த மக்கள் பலர் இன்றைய தினமே தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் செல்கின்றனர்.
சென்னை,
தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் 19-ந்தேதி நடைபெறுகிறது. கடந்த சில வாரங்களாக அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்த நிலையில், இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைந்தது.
தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் விதமாக வரும் 19-ந்தேதி தமிழகத்தில் அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னையில் வசிக்கும் வெளியூர்களைச் சேர்ந்த மக்கள் பலர் இன்றைய தினமே தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் செல்கின்றனர்.
இதனால் தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தாம்பரம் ரெயில் நிலையம் அருகே கார்களும், பேருந்துகளும் நீண்ட வரிசைகளில் அணிவகுத்து நிற்கின்றன. இன்று இரவு மேலும் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கக் கூடும் என்பதால், ஜி.எஸ்.டி. சாலையில் கூடுதல் போலீசாரை நிறுத்தி போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.