நாடாளுமன்ற தேர்தல்: தமிழக விவசாயிகள் சங்கம் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.;

Update: 2024-04-05 08:29 GMT

சேலம்,

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் வருகிற 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் வருகிற 19-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, நாம் தமிழர் என 4 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.

எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்கனவே பல்வேறு கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று கோவையில் பிரசாரம் செய்த எடப்பாடி பழனிசாமி இரவு சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது வீட்டிற்கு வந்து தங்கினார்.

இந்த நிலையில் இன்று காலை எடப்பாடி பழனிசாமியை, தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் எஸ்.ஏ. சின்னுசாமி, மாநில பொதுச் செயலாளர் சுந்தரம் மற்றும் நிர்வாகிகள் 50-க்கும் மேற்பட்டோர் சந்தித்தனர். மேலும், நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்து கடிதம் வழங்கினர்.

தொடர்ந்து அவர்கள் கூறும்போது, விவசாயிகளுக்கான திட்டங்களை நிறைவேற்றி தந்ததுடன் நதிநீர் இணைப்பு திட்டத்திற்கு முன்னெடுப்பு மேற்கொண்டவர் எடப்பாடி பழனிசாமி என்பதால் அவருக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்