நாடாளுமன்ற தேர்தல் : ம.தி.மு.க.விற்கு தீப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு
நாடாளுமன்ற தேர்தலில், ம.தி.மு.க.வுக்கு தீப்பெட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கி உள்ளது.
சென்னை,
நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் திருச்சி தொகுதியில் ம.தி.மு.க. சார்பில் துரைவைகோ போட்டியிடுகிறார். இவர் தனக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க கோரி இந்திய தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்தார்.
இந்நிலையில், ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்தது. ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால், அந்த சின்னத்தை ஒதுக்க முடியாது. ஒரு கட்சிக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்டு இருந்த சின்னத்தை ஒரு தொகுதிக்காக பொது சின்னமாக அறிவிப்பது தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலில், ம.தி.மு.க.வுக்கு தீப்பெட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கி உள்ளது. ம.தி.மு.க.வுக்கு தீப்பெட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கி உள்ளதாக தேர்தல் அலுவலரும், திருச்சி மாவட்ட கலெக்டருமான பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.