நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம்: 24-ம் தேதி திருச்சியில் தொடங்குகிறார் எடப்பாடி பழனிசாமி

நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தை வருகிற 24-ம் தேதி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருச்சியில் தொடங்குகிறார்.

Update: 2024-03-18 13:24 GMT

சென்னை,

நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந் தேதி முதல் ஜூன் மாதம் 1-ந் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. இதில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், காலியாக உள்ள விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ந் தேதி தேர்தல் நடக்கிறது.

நாடாளுமன்ற தேர்தலை அமைதியாகவும், நேர்மையான முறையிலும் நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதால், அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகிற 24-ம் தேதி திருச்சியில் தொடங்குகிறார். 24-ம் தேதியில் இருந்து 30-ம் தேதி வரை திருச்சி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, சிதம்பரம், நாமநாதபுரம், கன்னியாகுமரி, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட தொகுதிகளில் பரப்புரை மேற்கொள்கிறார்.

இது குறித்து அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

19.04.2024 அன்று நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தலில், அ.இ.அ.தி.மு.க. சார்பிலும், அதன் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, கழகப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி 24.03.2024 (ஞாயிற்றுக்கிழமை) முதல் 31.03.2024 வரை முதல் கட்டமாக, தேர்தல் பிரச்சார சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

 

Tags:    

மேலும் செய்திகள்