'ராகுல் காந்தியை பிரதமராக்க பாகிஸ்தான் விரும்புகிறது' - பிரதமர் மோடி குற்றச்சாட்டு

காங்கிரஸ் கட்சியின் இளவரசர் அரசியல் சாசனத்தை தனது தலையில் வைத்துக்கொண்டு ஆடுவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.;

Update:2024-05-03 05:30 IST

ஆமதாபாத்,

குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், "இங்கு காங்கிரஸ் அழிந்து கொண்டிருக்கிறது. அங்கே பாகிஸ்தான் அழுது கொண்டிருக்கிறது. இப்போது பாகிஸ்தான் தலைவர்கள் காங்கிரசுக்காக பிரார்த்தனை செய்கிறார்கள்.

காங்கிரஸ் இளவரசரை (ராகுல் காந்தி) பிரதமராக்க பாகிஸ்தான் விரும்புகிறது. அதேபோல் காங்கிரஸ் ஏற்கனவே பாகிஸ்தானின் ரசிகராக உள்ளது. பாகிஸ்தானுக்கும் காங்கிரசுக்கும் இடையிலான இந்த கூட்டு இப்போது முற்றிலும் அம்பலமாகியுள்ளது.

நாட்டை ஒன்றிணைக்கும் சர்தார் சாகேப்பின் கனவை நனவாக்குவதில் மோடி மும்முரமாக இருக்கும் போது, காங்கிரஸ் நாட்டை பிளவுபடுத்துவதில் மும்முரமாக உள்ளது. சமூகத்தில் சண்டைகளை உருவாக்க காங்கிரஸ் விரும்புகிறது.

மோடி வருவதற்கு முன், இந்த நாட்டில் 2 அரசியலமைப்பு சட்டங்களும், 2 கொடிகளும் இருந்தன. இளவரசரின் கட்சியான காங்கிரசும் அவரது குடும்ப உறுப்பினர்களும் நாட்டில் அரசியல் சட்டத்தை அமல்படுத்த அனுமதிக்கவில்லை.

காங்கிரஸ் கட்சியின் இளவரசர் அரசியல் சாசனத்தை தனது தலையில் வைத்துக்கொண்டு ஆடுகிறார். ஆனால் கடந்த 75 ஆண்டுகளில் இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் அரசியல்சாசனம் ஒரே மாதிரி செயல்படுத்தப்படவில்லை. காஷ்மீருக்கு அரசியல் சாசனம் பொருந்தாது. அங்கு சட்டப்பிரிவு 370, சுவர் போல தடையாக இருந்தது. நாங்கள் அதனைத் தகர்த்தோம்.

காங்கிரசின் 60 ஆண்டுகால ஆட்சி, வெறும் ஆட்சியே. ஆனால் மோடியின் 10 ஆண்டுகள் தேசத்துக்கான சேவை. 60 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில், கிராமப்புற மக்களில் 60 சதவீதம் பேருக்கு கழிப்பறை இல்லை, 10 ஆண்டுகளில் 100 சதவீதம் கழிவறைகளை பா.ஜனதா அரசு கட்டிக் கொடுத்தது.

60 ஆண்டுகளில், நாட்டில் உள்ள 3 கோடி கிராமப்புற வீடுகளுக்கு, அதாவது 20 சதவீதத்துக்கும் குறைவான குடும்பங்களுக்கு மட்டுமே, குழாய் நீர் வசதியை காங்கிரசால் வழங்க முடிந்தது. வெறும் 10 வருடங்களில் குழாய் நீர் உள்ள வீடுகளின் எண்ணிக்கை 14 கோடியை எட்டியுள்ளது.

அதாவது 75 சதவீதம் வீடுகளில் குழாய் நீர் உள்ளது. 60 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியை நாடு கண்டுள்ளது. இப்போது நாடு பா.ஜனதாவின் 10 ஆண்டுகால சேவையையும் கண்டுள்ளது. எனவேதான் இன்று ஒட்டுமொத்த நாடும் மீண்டும் மோடி அரசு என்று நம்பிக்கையுடன் கூறுகிறது.

கடந்த 2014-ம் ஆண்டு குஜராத்தில் இருந்து உங்கள் மகனை டெல்லிக்கு அனுப்பி, நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டபோது, அப்போது நாட்டின் பிரதமர் மிகவும் கற்றறிந்த பொருளாதார நிபுணராக இருந்தார். அவர் வெளியேறும் போது, நாடு உலகின் 11-வது பெரிய பொருளாதாரமாக இருந்தது. 10 ஆண்டுகளில், இந்த குஜராத்தி டீ விற்பனையாளர் (மோடி) நாட்டின் பொருளாதாரத்தை 5 வது இடத்துக்கு கொண்டு சென்றார்.

எனக்கு ஒரே ஒரு கனவு தான் இருக்கிறது வரும் 2047-ல் இந்திய சுதந்திரத்தின் 100-வது ஆண்டைக் கொண்டாடும் போது நாடு வளர்ந்த இந்தியாவாக இருக்க வேண்டும். இதற்காக இரவு, பகல் பாராமல் அயராது உழைப்பேன். இது எனது உத்திரவாதம்" என்று பிரதமர் மோடி பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்